tamilnadu

img

கொரோனா இரண்டாவது அலை: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் -சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் சென்னையில் 
நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில
செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கொரேனா இரண்டாவது
அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழக அரசு விரைந்த செயல்பட வேண்டும்
என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும்
அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இந்த கொடும் நோய்த்
தொற்றில் இரண்டாவது அலை இளம் தலைமுறையினரையும் மோசமாக
பாதித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 45 நாட்களில்
சென்னையில் மட்டும் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரித்துள்ளதாக
மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
இரண்டாவது அலை என்பது இளைஞர்களை அதிகம் பாதிப்பதாக
கண்டறியப்பட்டுள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும்
தடுப்பூசி போடப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை
நிறுத்தி உள்நாட்டில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும். மருந்து உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். தற்போது போதுமான
அளவு தடுப்பூசி கை வசம் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களின் ஒரு பகுதியினருக்கு இருக்கும்
தயக்கத்தை போக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டும்.

முகக் கவசம், கைகளை சுத்தப்படுத்துதல், தனி மனித இடைவெளி போன்ற
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆர்.டி., பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளின் அடக்கவிலை ரூ.200/- அளவுக்கு
குறைந்துள்ளது. ஆனால் பரிசோதனைக் கட்டணம் ரூ. 1500/- வரை
வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும். கொரோனா பரிசோதனைகள்
அதிகரிக்கப்பட வேண்டும்.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகப்படுத்திட வேண்டும்.
கல்லூரிகள், திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றிட வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளை அரசு கையகப்படுத்தி கொரோனா
நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில்
கொரோனா அல்லாத நோய்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது
தமிழக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை இடைக்காலமாக
நியமித்தது. தற்போது மினி கிளினிக்குகளிலும் தற்காலிகமாக மருத்துவர்கள்
மற்றும் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பணி
நிரந்தரம் செய்வதோடு, அனைத்து மருத்துவ மற்றும் முன்கள
பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். போதுமான அளவு மருத்துவர்கள்,
செவிலியர்கள் புதிதாக பணியமர்த்தப்பட வேண்டும்.
பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் இல்லாத சூழலில்
பணியாற்றுகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டால் ரூ. 2 லட்சம், மரணமடைந்தால் ரூ. 50 லட்சம்
வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் கொரோனா தடுப்பு
பணியில் ஈடுபடுபவருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்
என்றும் கூறியது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த சலுகைகள் எதுவும்
கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

இது கொரோனா தடுப்பு பணியை பாதிக்கும். எனவே, அரசு அறிவித்தபடி
நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும் மதுபானக்
கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. மதுபான கடைகள் மூடப்பட
வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக கொரோனா தொற்று இரண்டாவது அலையை
கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு அரசின் புதிய கட்டுப்பாடுகளால்
பாதிக்கப்படுவோர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டுமெனவும்
கேட்டுக் கொள்கிறோம்.

;