tamilnadu

img

50 % விலையில் புத்தகங்கள்: விற்பனையை தொடங்கி வைத்தார் கே.பாலகிருஷ்ணன்....

சென்னை:
‘புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ என்ற உயரிய நோக்கோடு அமைக்கப்பட்டுள்ள பாரதி புத்தகாலயத்தின் புத்தகக் காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பாரதி புத்தகாலயம் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான புத்தகக் காட்சி பாரதி புத்தகாலயத்தில் (எண். 7, இளங்கோசாலை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் அருகில்) அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை சனிக்கிழமையன்று (டிச.26) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘குடியுரிமையும் குடியுரிமைச் சட்டமும்’ எனும் நூலை கே.பாலகிருஷ்ணன் வெளியிட திரைப்பட இயக்குநர் ராஜூமுருகன் பெற்றுக் கொண்டார்.இதன்பின்னர் விற்பனையை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “வாசிப்பு இயக்கத்தை தமிழகத்தில் சக்திமிக்க இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிற பாரதி புத்தகாலயம், இந்தாண்டும் ‘புத்தாண்டை புத்தகங்களோடு கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை நடத்துகிறது” என்றார்.

கருத்தாலும் கரத்தாலும் உழைக் கும் உழைப்புதான் இதர உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த உழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதமாக புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களே உலகை புரிந்து கொள்ளவும், புதிய உலகை படைக்கவும் திறவுகோலாக உள்ளன என்றும் உற்ற தோழர்களை விட சிந்தனை வளத்தை அளிக்கக்கூடியவை புத்தகங்கள். புத்தகங்கள் சிறந்த எதிர்காலத்திற்கு வழிசெய்யக் கூடியவை. அனைத்து தமிழ் மக்களும் புத்தகத்தோடு புத் தாண்டை கொண்டாட வேண்டும் என் றும் பாலகிருஷ்ணன் கூறினார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஒப்புக் கொள்வாரா?
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “மக்கள் இயக்கங்கள் அனைத் திற்கும் அதிமுக தடை விதித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் செயல்படக் கூடாது, எதிர்க்கருத்துகள் வரக் கூடாது என்பதற்காக தடை விதிக்கிறார்கள். இதையெல்லாம் மீறி அதிமுகவுக்கு எதிராக மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள்” என்றார்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழுபரிந்துரையை அரசு அமல்படுத்த வில்லை. அடக்கவிலையை கணக்கிடும்போது அடிப்படையான அம்சங்களை அரசு  கைவிட்டுவிடுகிறார்கள். தனது பரிந்து ரையை மத்திய அரசு அமல்படுத்துகிறது என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஒப்புக் கொள்வாரா?” என்றும் பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.“ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று, நல்ல உடல் நிலையோடு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்ப வேண்டும்” என்றார்.பாரதி புத்தகாலயத்தின் இயக்குநர் க.நாகராஜன் கூறுகையில், டிச.26 முதல் ஜனவரி 3 வரை கண்காட்சி செயல்படும். பாரதி புத்தகாலயத்தின் ரூ.25க்கு மேற்பட்ட அனைத்து வெளியீடுகளுக்கு 50 சதவீத சிறப்புக் கழிவு வழங்கப்படும் என்றார்.இந்நிகழ்வின்போது பாரதி புத்தகாலய மேலாளர் சிராஜூதின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.