tamilnadu

img

வடலூரிலும் அண்ணாமலையிலும் புதிய சோதிகளாய் புறப்பட்டதம்மா போராளிகள் கூட்டம்.

கல்லும் முள்ளும்
கடுகி நடக்கும்
கண்ணம்மாக்கள்
சொல்லும் சேதிகளில்
வெல்லும் நீதி கேட்குதம்மா.

பிஞ்சுக் குழந்தைகள்
பிய்த்தெறியும்
காமுகக் கும்பல்
காலொடிக்க
சிங்கமாய்
சினந்து வருகுதையா
சீரிய கூட்டமொன்று.

மனம் சேர்ந்து
மணமுடிக்கும் காதலர்கள்
பிணமாக்கும் பித்தர் கும்பலிங்கே.
சாதி மறுத்த அவர்களுக்கு
நீதி கேட்கும்
நீள் பயணத்தில்
ரணமாய் போன கால்கள்
நாளையதை
குணமாய் மாற்றுமையா.

நானூறு மைல்
நடை முடிவில்
நிமிர்ந்து நிற்கப்
போகுதையா
தளர்ந்து
தள்ளாடும் தமிழகம்.

பிள்ளை குட்டிகள்
பெற்றோர் மற்றோர்
பொறுப்பில் விட்டு
பீடு நடை போடும்
ஈடில்லாப் பெண்களிடம்
பிறக்குமையா
போதையற்ற 
பொன்னுலகம்.

துணை என்றில்லாமல்
இணை என்றே
எண்ணிப்பாரும்
என்றவர் கூறும்
எசப்பாட்டு கேட்குதையா
எட்டுத் திக்கும்

வலிகள் மறந்து
நீள் வழி நடக்கும்
ஒலிகள் கூட்டி
ஒற்றுமை சேர்க்கும்
நம் வீட்டு
நல்ல தங்கைகளிடம்
நாளை மலரும்
வன்முறையற்ற
வண்டமிழ் நாடு.

- ரமணன்