மன்னார்குடி அக்.25- குடவாசலில் இருந்து கொரடாச்சேரி லெட்சுமாங்குடி கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் வழியாக மாவூர் வரையுள்ள 35.6 கிமீ தூர மாவட்ட முக்கிய சாலைத் திட்டப் பணிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் நிதி ஒதுக்கீட்டில் 5.6 அகல தார்ச்சாலை புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. நாகங்குடி பழையனூர் வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் திட்டச்சேரி இளமங்கலம் ஊட்டியாணி திருநாட்டியத்தாங்குடி மாவூர் கேட் சித்திரையூர் சிக்கவேலி மாவூர் வரை உள்ள கிராம மக்கள் வட்டத் தலைநகரான கூத்தாநல்லூருக்கும் மாவட்ட தலைநகரான திருவாரூருக்கும் தஞ்சை திருச்சி போன்ற நகரங்களுக்கு வந்து போவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அகலம் குறைந்த குண்டுங்குழியுமான வடபாதிமங்கலம் சாலையில் மழைகால இரவுகளில் ஊர் திரும்புவது பெரும் போராட்டமாக இருந்து வருகிறது.
5.5 மீட்டர் தார் பயன்பாட்டு அகலமுள்ள சாலை ஒரே சீராக அமைக்கப்படவிருப்பதால் இரவில் பாதுகாப்பான தாகவும் சிரமமின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குடவாசலிலிருந்து 3.6 கிமீ தூரத்தில் இந்த பணிகள் துவக்கப்பட்டு 6.6 கிமீ வரை ஒரு கட்டமாகவும், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து அதாவது 17.6 கி மீட்டரிலிருந்து 35.6 கிமீ மாவூர் வரையில் ஒரு கட்டமாகவும் சாலை அமைக்கும் பணி நடைபெறவிருக்கிறது. இடையிலுள்ள சாலை ஏற்கனவே மாநில நெடுஞ்சாலைத் துறை நிதி ஒதுக்கீட்டில் போடப்பட்டு நல்ல நிலையில் உள்ளது என நெடுஞ்சாலைத் துறை தகவல்கள் கூறுகின்றன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவின் தஞ்சை கோட்டமும் அதன் கீழமை நாகைப்பட்டினம் உதவி கோட்டத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் 31.3.2020-க்குள் இப்பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணி மத்திய தேசிய நெடுஞ்சாலை துறையின் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைபெறுகிறது.