வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

கைவிரல் அடிபட்ட சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ததில் சிறுமி பலி முத்தூஸ் மருத்துவமனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

சிங்காநல்லூர் டாக்டர் முத்தூஸ் எலும்பு முறிவு மருத்துவமனையில், விரலில்  ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சிங்காநல்லூர்  நீலிகோணம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார்  நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவரின் மகள்  ஹேமவர்னா. கடந்த வாரம் 7 வயதான மகள் உட்பட  குடும்பத்துடன் மைசூருக்கு சென்று இருந்தார். அப்போது உறவினர் வீட்டில்  தங்கியிருந்த போது  கதவு இடுக்கில் ஹேமர்னாவின் கைவிரல் சிக்கி  காயம் ஏற்பட்டது.  அங்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்ட நிலையில் , செவ்வாயன்று  கார்த்திகேயன் குடும்பத்துடன்  கோவைக்கு திரும்பினார். சிறுமிக்கு கை விரலில் வீக்கம் தொடர்ந்து இருக்கவே, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் எலும்பு சிகிச்சை  மருத்துவமனையில் ஹேமவர்னா  சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

கையில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி புதனன்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக முத்தூஸ் மருத்துவமனை  நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் கையில் அடிபட்ட குழந்தை எப்படி இறந்து போகும்?  என கேட்டு மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய பெற்றோர் இது குறித்து சிங்காநல்லூர் காவல் துறையில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை  வயது மகள் பிரியதர்ஷினி கையில் ஏற்பட்ட காயத்திற்கு, சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது உயிரிழந்தது. அப்போதும் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சிங்காநல்லூர் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையிலும் அதே போல கையில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த 7 வயது சிறுமி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது, சிறுமி கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கட்டியிருந்துள்ளது எனவும், கீழே விழுந்ததை பெற்றோர் சொல்ல வில்லை எனவும் தெரிவித்தார். கை விரலுக்கு சிகிச்சை முடிந்த பின் குழந்தைக்கு வலிப்பு வந்துள்ளது எனவும், இதன் பின் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்த போதுதான் தலையில் ரத்தம் உறைந்து இருப்பது தங்களுக்கு தெரியவந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் அடுத்தடுத்து குழந்தைகள் உயிரிழந்து வருவதாக புகார் எழுந்து வரும் நிலையில் , இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமியின் உடலை வாங்க மறுத்து குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனையில் பிணவறை முன்பாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், முத்தூட்  மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டினர். குழந்தைக்கு தலையில் அடி ஏதும் படாத நிலையில் ,குழந்தையின் தலையில் காயம் இருப்பதாக தவறான தகவலை முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகம் சொல்வதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், அந்த  மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து கலைந்தனர் உறவினர்கள் போராட்டம் காரணமாக அரசு  மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

;