tamilnadu

img

கோவையில் மத்திய அரசின் சிஜிஎச்எஸ் மருத்து மையம் அமைக்க ஒப்புதல்: பி.ஆர்.நடராஜன் எம்பி யின் தொடர் முயற்சிக்கு வெற்றி

கோயமுத்தூர், ஜூன். 11 – மேற்கு மண்டலத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் குடும்பத்தினர் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மருத்துவ வசதியினை பெறுவதற்கு வசதியாக கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தை அமைக்கப்பட வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர் வலியுறுத்துதலின் பேரில் கோவையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு இஎஸ்ஐ மருத்துவமனை இயங்குவது போல், ரானுவனத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை செலுத்தி இலவசமாக சிகிச்சை பெருவதற்கு சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்)  மருத்துவமனைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் ஏற்படுத்தி அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான செலவுகளை முழுவதும் சிஜிஎச்எஸ் திட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு செலுத்தப்படுகிறது. இந்த சிஜிஎச்எஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இந்த சேவை உள்ளது. இதனால் இந்த மருத்துவ வசதிகளை பெருபவர்கள் சென்னைக்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே மேற்கு மண்டலத்தின் மையமான பகுதியாக கோவை மாவட்டம் உள்ளதால் சிஜிஎச்எஸ் மருத்துவ மையத்தை கோவையில் துவக்க வேண்டும். இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து கோவையில் சிஜிஎச்எஸ் (சென்ட்ரல் கவர்மென்ட் ஹெல்த் ஸ்கீம்) மருத்துவ மையம் அமைத்திட என்பதை வலியுறுத்தி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு கரூர், திண்டுக்கல், பாலக்காடு ஆகிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று மத்திய சுகதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி மீண்டும் கடிதம் எழுதியிருந்தார். இந்த தொடர்ச்சியான வலியுறுத்துதலையடுத்து தற்போது மத்திய சுகாதாரத்துறை கோயமுத்தூர் உள்ளிட்ட நாடு முழுவதும் 16 இடங்களில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையங்களை அமைக்க ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருந்தாளுநர், ஒரு அலுவலக பணியாளர், ஒரு செவிலியர் கள் ஆகியோர் நியமிக்கப்படுவர். நிதி ஒதுக்குடு 2020-2021 பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் கூறுகையில், மேற்கு மண்டலத்தை மையப்படுத்தி கோவை மாவட்டத்தில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைக்கப்படும் என ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சேவையால் ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட ராணுவத்தினர், மத்திய அரசு ஊழியர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வசதியினை பெற முடியும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கோவைக்கு இந்த  மருத்துவ சேவை வழங்கப்படுவதால் அலைச்சல், காலவிரயம் ஆகியவை தவிர்க்கப்படும். மேலும் பெரிய அறுவை சிகிச்சை செய்வதற்கு பல தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் ஏற்படும். மருத்துவ சேவைகள் விரிவடையும். இதனால் கோவையை மையப்படுத்திய எட்டு மாவட்டங்களில் உள்ள பயனாளிகள் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றார்.

 

தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கோவை ஈஎஸ்ஐ ருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவ கல்லூரியாக உருவாக பெரும் முயற்சி மேற்கொண்டு அதனை நிறைவேற்றியவர் பி.ஆர்.நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது

;