tamilnadu

வேதிப் பொருட்களைக் கொண்டு பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

நாமக்கல், மே 29-காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள், பழ வகைகளை செயற்கை வேதிப் பொருட்களைக் கொண்டு பழுக்க வைத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கால்சியம் கார்பைடு கற்களையோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் போது மக்களுக்கு உணவு உபாதைகளும், அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலியும், மயக்கமும், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாக அமைகிறது.கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப்பொருட்களை தெளித்து பழுக்கவைக்கப்பட்ட பழங்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நாமக்கல் காய்கறி மற்றும் கனி அங்காடி வணிகர்கள் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். தொடர்ந்து அறிவுறுத்தியதற்கு பிறகும் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோர் மீது உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி குற்றவழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.