tamilnadu

img

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊழல் புகாரைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க நிர்வாகிகள் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. முன்னாள் தலைமைத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையிலான குழுவினர், 33 மாதங்களாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வகித்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல, துணைத் தலைவர் பதவிக்கு மகிம் வர்மா, செயலாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய், பொருளாளர் பதவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் இளம் சகோதரர் அருண் துமல் ஆகியோர் மட்டும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் இன்று காலை நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்று கொண்டார். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைவர் பதவியில் இருக்கும் சவுரவ் கங்குலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த உள்ளதாக, கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.