பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் தனது துடிப்பான ஆல்ரவுண்டர் பணியால், பாகிஸ்தானுக்கு 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றுக் கொடுத்தார். ஞாயிறன்று நிறைவுபெற்ற இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்நாட்டு வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். அதில்,”டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும், கடைசி பந்து வரை போராடும் படியும்” கேட்டுக்கொண்டார்.ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்றும் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக கடுமையாகப் போராடினாலும் தோல்விகண்ட கடுப்பில் அந்நாட்டு ரசிகர்கள் பிரதமர் கூறிய அறிவுரையை மதிக்காதவர்களெல்லாம் வீரர்களா? என கருத்து தொடர்பான குண்டை வீசிவருகின்றனர்.