states

img

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நின்றிருந்த காரின் உரிமையாளர் மர்ம மரணம்

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நின்றிருந்த காரின் உரிமையாளர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அடுக்குமாடி வீட்டின் அருகே கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி கார் ஒன்று நின்றிருந்தது. அந்த காரை காவல்துறையினா் பரிசோதித்தனா். அப்போது அந்தக் காரில் வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் கடிதம் ஒன்று இருந்தது.  இதையடுத்து ஜெய்ஷ்-உல்-ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பு அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றது. அவா்களே அந்தக் காரை முகேஷ் அம்பானியின் வீட்டருகே நிறுத்தியதாக தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மும்பை காவல்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினா் விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் வாகன உதிரிபாகங்கள் தொழிலில் ஈடுபட்டு வந்த ஹிரேன் மன்சுக் என்பவருக்குச் அந்தக் காா் சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்தக் காா் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி திருடப்பட்டிருந்தது. ஹிரேன் மன்சுக்கிடம் விசாரணை நடத்தியபோது தனது காா் திருடப்பட்டது குறித்து காவல்நிலையத்தில் புகாா் அளித்ததாக அவா் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்ததாக காவல்துறையினா் கூறினா்.
இந்நிலையில் ஹிரேனை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினா் தாணேவில் உள்ள நெளபாடா காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அவரை காவல்துறையினா் தேடியபோது அங்கிருந்த நீரோடையில் ஹிரேன் சடலமாக இருந்தது தெரியவந்தது. அவரின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினா், அதனை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். அம்பானியின் வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் காா் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்தில் பிரதான சாட்சியாக இருந்த ஹிரேன் மன்சுக் மா்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

;