states

img

இந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள்... கர்நாடகத்தில் வெடித்தெழும் போராட்டம்....

பெங்களூரு:
ஒன்றிய பாஜக அரசானது, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14-ஐ ‘இந்தி மொழி நாள்’ (Hindi Diwas- இந்தி திவஸ்) என்று அறிவித்து, அதனைக் கொண்டாடி வருகிறது. நாட்டில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், ஆட்சி நிர்வாகம் என்ற பெயரில் அதனை இந்திபேசாத மக்கள் மீது திணிப்பதும் பல்வேறு மாநிலங்களில்அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது. இதனால், ‘இந்தி திவஸ்’ நாளை, இந்தி ஆதிக்க எதிர்ப்பு நாளாக கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடைப்பிடித்து வருகின்றன.

அந்த வகையில், செவ்வாயன்று (செப்.14) கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்,ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.‘கன்னட ரக்‌ஷன வேதிக’ அமைப்பினர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் முன்னின்று நடத்திய இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமான ‘ஜனதாதள் எஸ்’ (@JanataDal_S) செப்டம்பர் 13 முதலே இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றும், “இந்த எதிர்ப்பை டுவிட்டரில் டிரெண்டிங்காக்க வேண்டும்” என்றும் இடைவிடாமல் பதிவுகளை  வெளியிட்டு வந்தது. அதற்கேற்ப,சமூக வலைதளங்களில் ‘இந்தியைத் திணிப்பதை நிறுத்துங்கள்’ (#StopHindiImposition) என்ற ஹேஷ்டேக், செவ்வாயன்று இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.  இந்த ஹேஷ்டேக் பதிவில் கர்நாடகத்தவர் மட்டுமன்றி, தமிழ்நாடு, ஆந்திரா,மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்தனர். ‘‘ஹிந்தி திவாஸ் கொண்டாட்டம்; இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள்” என்றும் “பெரும்பான்மையினர் பேசுவதால் இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்றால் நாட்டின் தேசிய பறவையாக காகம்-தான் இருக்க வேண்டும்” என்ற அறிஞர் அண்ணாவின் கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.பீகாரில் மைதிலி மொழி பேசும் சமூகவலைதள பதிவர்களும், “தங்கள் மொழிக்கான அங்கீகாரம் இன்னமும் கிடைக்கவில்லை. இந்தியாவின் உலகின் பழமையான மொழிகளில் மைதிலி மொழி முக்கியமானது” என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.இப்போதாவது இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக விழித்துக் கொள்ள வேண்டும்என்று பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

;