states

img

வீட்டில் டிவி இருந்தால் பிபிஎல் ரேசன் அட்டை ரத்து..... கர்நாடக பாஜக அரசு மிரட்டல்....

பெங்களூரு:
வீட்டில் டிவி வைத்திருப்போரை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களாக கருத முடியாது என்றும், அவர்களுக்கான ரேசன் அட்டை ரத்து செய்யப்படும் என்றும் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேத் கத்தி கூறியுள்ளார்.
இன்றைய வாழ்வில், தொலைக்காட்சி, மொபைல் போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருட்களாகி விட்டன. 150 ரூபாய் டிக்கெட் வாங்கி திரைப்படத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு தொலைக்காட்சி குறைந்தபட்ச பொழுதுபோக்குத் தேவையாக உள்ளது. நபர் ஒருவருக்கு ரூ. 100, 200 டிக்கெட் வாங்கி பேருந்தில் செல்ல முடியாத சிறு குடும்பங்கள், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல.

ஆனால், ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் அதிகமாக இருப்போரை வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோராக கருத முடியாது என்றும், கர்நாடகத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான ரேசன் அட்டை பயனாளர்கள் தவறான வருமான கணக்கு சான்றிதழைக் காட்டி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்கான (Below Poverty Line - BPL) ரேசன் அட்டையை பெற்றுள்ளனர் என்றும் கர்நாடக பாஜகஅமைச்சர் உமேஷ் கத்தி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், “வீட்டில் டிவி, குளிர்சாதன பெட்டி, இருசக்கர வாகனம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து தங்களது பிபிஎல் ரேசன் அட்டையைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏப்ரல் இறுதிக்குள் பிபிஎல்அட்டைகளை திருப்பி ஒப்படைக்காத பயனாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள அம்மாநில முன்னாள் உணவுத்துறை அமைச்சர் யு.டி.காதர், “ஏழை, எளிய மக்கள் டிவி பார்ப்பதையும், இரு சக்கர வாகனத்தில் செல்வதையும் பிடிக்காமலேயே அமைச்சர் உமேஷ் கத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;