states

img

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்யா அகாடமி விருது வழங்கப்பட்டது

2020-ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாடமி விருதுகள் 2021, மார்ச் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.இதில் தமிழில் ‘செல்லாத பணம்’ நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்யா அகாடமி விருது வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

தமிழ் எழுத்தாளரான இமையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள கலுதூரில் மார்ச் 10, 1964-இல் பிறந்தவர். தமிழ், ஆங்கிலம், கல்வியியல் ஆகியவற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர். கல்வியியல் துறையில் ஆசிரியராக பணிபுரிபவர். ஆறு நாவல்களும், ஒரு குறுநாவலும், சிறு கதைகள் மூன்று தொகுதிகளும் எழுதியவர்.அவற்றில் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், கொலை சேவல், நறுமணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,அக்னி அட்சர விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது, இயல் விருது, ஆனந்த விகடன் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்க விருது, திராவிடர் கழகத்தின் பெரியார் விருது முதலிய விருதுகளைப் பெற்றவர்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கிவரும் இமையத்தின் முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளியானபோதே தமிழ் இலக்கிய உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

கோவேறு கழுதைகள் நாவலில் இருந்து தொடர்ச்சியாக தன் எழுத்துகளில் எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், சாதியப்பிரச்சனைகளையும் பதிவு செய்து வருகிறார் இமையம்.

ஆங்கிலம், பிரெஞ்சு என்று பல்வேறு மொழிகளில் இமையத்தின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டன.  

இவர் எழுதிய செல்லாத பணம் என்ற நாவல், ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை சித்தரிக்கிறது. அவள் ஒரு நாட்டுப்புற இளைஞனைக் காதலித்துத் தன்னிச்சையாகத் திருமணம் செய்து கொள்கிறாள். இறுதியில் தன்னைத் தீயீட்டுக் கொளுத்தும் அளவுக்குச் செல்கிறாள். மானிட ஆதிக்கத்தின் கொடுமைகளையும், திருமணக் கட்டமைப்பு, குடும்பம், சாதி ஆகியவற்றை விமர்சிப்பதன் மூலமாக, மனித விழுமியங்கள் அழிந்து வருவதைப் படிப்போரிடையே அவர்தம் உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது இந்நாவல். இந்திய நாவல் வரலாற்றில் தமிழில் செல்லாத பணம் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.

இந்நிலையில், எழுத்தாளர் இமையத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த சாகித்யா அகாடமி விருதிற்கான தொகையான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், செப்பு பட்டயமும் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று  வழங்கப்பட்டது.

;