states

img

குளிர்காலக் கூட்டத் தொடரில் சட்ட திருத்தம் வங்கிகளை சூறையாட ஒன்றிய அரசு முடிவு

புதுதில்லி, அக்.23- வங்கிகளைச் சூறையாட முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, குளிர்காலக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 1969 ஆம் ஆண்டில் இந்திய அரசு, 14 மிகப்பெரும் வணிக வங்கிகளை அரசுடை மையாக்கியது; அதேபோல் 1980-ஆம் ஆண்டில் மேலும் ஆறு  மிகப்பெரும் வங்கிகளை அரசுடைமையாக்கியது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் விளைவாக வங்கித்தொழில் வணிகத்தில் 91 சதவீதம் அளவை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது பொதுத்துறைகளை தொடர்ந்து சூறையாட மோடி அரசு முடிவு செய்துள்ளது. நடைபெறவுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில் மூன்று முக்கிய சட்டதிருத்தங்களை  (குறிப்பாக வங்கிகளை சூறையாடுவது, பென்சன் திட்டத்தை சிதைப்பது) அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாக புதுதில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தபடி பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு முன்மொழியப்பட்ட சட்டம் உட்பட இரண்டு முக்கிய நிதித்துறை மசோதாக்களை அரசு அறிமுகப்படுத்தலாம் எனத் தெரிகிறது. உலகளாவிய ஓய்வூதியத் திட்டத்தை உறுதி செய்வதற்காக,

தேசிய (NPS) ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையை  உருவாக்கிட ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority) சட்டம், 2013- இல் திருத்தங்களை முன்மொழியவும் வாய்ப்புள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, ​​வங்கி ஒழுங்கு முறைச் சட்டம், 1949 -இல் அரசாங்கம் திருத்தங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளை தனியார்மயமாக்குதல், குறிப்பாக வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் இடமாற்றம்) சட்டம், 1970 மற்றும்  1980-இல் திருத்தம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது. 1970, 1980 ஆண்டு காலத்திய சட்டங்கள் வங்கி கள் தேசியமயமாக்கலுக்காக கொண்டு வரப்பட்டவை. தற்போது இவற்றில் திருத்தம் செய்து வங்கிகளை தனியாருக்குக் கொடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போதே பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவோம் என்று கூறியிருந்தார்.

;