states

கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டை ஒன்றிய அரசே வழங்க வேண்டும்

மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, செப்.24- கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத்தொகையை ஒன்றிய அரசே அளித்திட வேண்டும் என்றும், அதனை மாநில அரசுகளுக்குத் தள்ளிவிடக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ஒன்றிய அரசு, கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத்தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை அதிகாரக்குழுமம் (National Disaster Management Authority) பரிந்துரைத்திருப்பதாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்திருக்கிறது. எனினும் இந்தத் தொகை மாநில அரசாங்கங்களால் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF-State Disaster Relief Fund) வழங்கப்பட வேண்டும். கொரோனா மரணங்களுக்கான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என மாநில அரசாங்கங்கள் மீது சுமையை ஏற்றுவது முறையல்ல. மாநிலப் பேரிடர் நிவாரண நிதி என்பது கொரோனா தொற்றை சமாளிப்பது உட்பட அனைத்து வகையான பேரிடர்கள் சம்பந்தப்பட்டதற்கும் செலவிடப்பட வேண்டிய ஒன்றாகும்.  

மேலும் மாநில அரசாங்கங்கள் மிகவும் ஆழமான நிதி நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றை சமாளிக்கும் பணி பிரதானமாக ஒன்றிய அரசின் முயற்சியாகும். இதற்கு மாநில அரசாங்கங்களும் உதவிடும். கொரோனா  தொற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் ஒன்றிய அரசாங்கத்தின் அதிகாரிகள் மூலமாகவே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கும் பிரதான பொறுப்பையும் ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்னமும் தன் இறுதித்தீர்ப்பை வழங்கிட வில்லை. ஒன்றிய அரசின் பிரதானப் பொறுப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;