states

img

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில் இருந்தவர்கள் 5,000 பேர்; நேரில் கண்ட சாட்சிகள் 23 பேர் தானா?

புதுதில்லி, அக்.26- இந்தச் சம்பவத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை அடுத்து அக்டோபர் 11 அன்று ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு செவ்வாயன்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும்  ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்  விசார ணைக்கு வந்தது.  வழக்கின் நிலை குறித்த இரண்டா வது அறிக்கையை உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்தது. உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, சம்பவம் தொடர்பாக 28 பேர் சாட்சிகளாக உள்ளனர் என்றார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தில்  நான்காயிரம் முதல்  ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா  என்று அதிர்ச்சியும் வியப்பும் மேலிட கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில்  மிக நெருக்கமாக இருந்தவர்கள் மற்றும் கார்களை யும்  வாகனங்களில் இருந்தவர்களையும் பார்த்த வர்கள் இந்த 23 பேரில் உள்ளனர். சம்பவத்தைத்  தொடர்ந்து பல்வேறு வீடியோ காட்சிகள் எங்களு க்குக் கிடைத்துள்ளன. இந்த வீடியோக்களின் சரியான காட்சிகள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப்பட்டு தரப்படும் என்றார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த்,  இந்த வழக்கு உத்தரப்பிரதேச அரசின் வழக்கு  என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சம்பவம் நடைபெற்ற இடத்தில்  4,000 முதல் 5,000 பேர் இருந்தனர். அவர்கள் உள்ளூர்வாசிகள். ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் அவர்கள் சாட்சி யம் அளிக்க முன்வரத் தயங்குகிறார்கள்.  உள்ளூர்  மக்களை நீங்கள் அணுகுவது, அடையாளம் காண்பது என்ன உங்களுக்கு பெரிய பிரச்சனை யாகவா இருக்கப் போகிறது எனக் கேள்வியெழுப் பினார். திரண்டிருந்தவர்களில் சிலர் வேண்டுமானால்  தீவிர சாட்சிகளாக இருக்கமாட்டார்கள்.  ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்ததை சொல்லக் கூடியவர்களை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் நீதிபதி சூர்யகாந்த். தொடர்ந்து வாதாடிய வழக்கறிஞர் சால்வே சட்டப்பிரிவு 164-இன் கீழ் இதுவரை சாட்சி யம் அளித்தவர்களின் அறிக்கைகளில் சிலவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில், வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி  சூர்யகாந்த், “காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். நம்பகமான வாக்குமூலங்களை அளிக்கக்கூடிய  சாட்சிகளை கண்டுபிடிக்க வேண்டி யது அரசின் கடமை” என்றார்.

இந்த 23 சாட்சிகளைத் தவிர வேறுயாரு மில்லையா? எனக் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா “ எங்களுக்கு ஒரு பயம் இருக்கிறது, அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அதற்கு அரசு  வழக்கறி ஞர் சால்வே, “நடைபெற்ற சம்பவத்தில் விவசாயி கள் கொல்லப்பட்டனர் என்பதில் சந்தேகமில்லை”  என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா,  “காயமடைந்த சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா” என்றார். அதற்கு சால்வே, உயிரிழந்தவர்கள் விவரங்கள் மட்டுமே உள்ளது என்றார். மீண்டும்  தலைமை நீதிபதி சம்பவத்தில் “ஒரு சாட்சி கூட காயமடையவில்லையா” என்று  கேள்வியெழுப்பினார். சிறிது நேரம் தயங்கிய வழக்கறிஞர் சால்வே, “காயமடைந்த சாட்சிகள் உள்ளனர்.  அவர்களில்   ஒருவர் அல்லது இருவர் பிரிவு 164-இன் கீழ் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என்றார். தொடர்ந்து நீதிபதிகள்.

“இன்னும் பல சாட்சிகளி டம் வாக்குமூலங்கள் பெறவேண்டும். வாக்கு மூலங்களைப் பதிவு செய்ய போதுமான ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் இருப்பதை மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும்” என்றனர். சம்பவத்தின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங் களை  தடயவியல் துறைக்கு அனுப்பவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். சாட்சிகளின் பாதுகாப்பு கருதி ஏற்கனவே அவர்களுக்கு காவல்துறை பாது காப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தப் பட்டுள்ளது என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் சாட்சிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷியாம் சுந்தர் மற்றும் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையின் தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.  இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி கள் நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மொத்தம் 68 சாட்சிகளில் 23 சாட்சிகள் இருப்பதாக உத்தரப்பிரதேச அரசு இரண்டாவது நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர்களில் 30 பேரின் வாக்குமூலம் மட்டுமே மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

;