states

img

கேரளத்தில் 105 நிவாரண முகாம்கள் திறப்பு

தீவிர விழிப்புணர்வு  தேவை: முதல்வர் வலியுறுத்தல்

திருவனந்தபுரம், அக்.17- கேரளத்தில் மழை நிற்காவிட்டால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வசிப்பிடங்களிலிருந்து விலகி இருக்க வும், அதிகாரிகளின் அறிவுறுத்தல் களைப் பின்பற்றவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 17 வரை கேரளா முழுவதும் இடியுடன் பலத்த காற்றும்  மழையும் இருக்கும் என்று மத்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி தற்போது வலு விழந்துள்ளது.

எனினும் மாலை வரை  மழை நீடிக்கும் என்று வானிலை முன்ன றிவிப்பு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி,  எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு மத்திய வானிலை  ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை  விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 105  நிவாரண முகாம்கள் திறக்கப் பட்டுள்ளன. தேவைப்பட்டால் அதிக முகாம்களை விரைவில் தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒவ்வொரு குழுவும் பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும், இடுக்கி, கோட்டயம், கொல்லம், கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் மேலும் 5 குழுக்கள் நிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் இரண்டு அணிகளில் ஒன்று திருவனந்த புரத்திலும் மற்றொன்று கோட்ட யத்திலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாது காப்புப் படை (டிஎஸ்சி) கோழிக்கோட்டில் ஒரு அணியையும், வயநாட்டில் ஒரு குழுவையும் நிறுத்தியுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை அவசரநிலைக்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது. தன்னார்வப் படை, பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவை அவசர நிலைகளைச் சமாளிக்கத் தயாராக உள்ளன.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

பொறியாளர் பணிக்குழு (இடிஎப்) பெங்களூரில் இருந்து முண்டக் காயத்திற்கு திரும்பியது. கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூரிலிருந்து விமானப்படையின் இரண்டு சாப்பர்கள் திருவனந்தபுரத்தை வந்தடைந்தன. பத்தனம்திட்டா மாவட்டத் தில், மல்லப்பள்ளி அருகே மக்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மீட்புப்  பணிகளை மேற்கொள்ள முயன்றாலும், ஏர் லிப்டிங் தேவைப்படலாம் என்ற மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானப்படை ஈடுபடுத்தப்பட்டது.   கொக்கயார் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு  பொட்டலங்களை வழங்க கடற்படை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மாநில அவசர மேலாண்மை மையம் மிகவும் சுறு சுறுப்பாக உள்ளது. அணைகளின் நிலை யை மதிப்பிடுவதற்காக அவசர மேலாண்மை மையத்தில் 24 மணி நேரமும் கேஎஸ்இபி, நீர்ப்பாசனத் துறை மற்றும் மோட்டார் வாகனத் துறையின் பிரதிநிதிகள் நிறுத்தப்பட்டனர். மாநில அவசர மேலாண்மை மையம் காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் நில வருவாய் கட்டுப் பாட்டு அறைகளுடன் தொடர்பு கொள்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைத் தலைவர்களும் எந்தவித அவசரநிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மத்திய வானிலை மையம் வெளியிட்ட சமீபத்திய எச்சரிக்கையின்படி, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவில் இன்றுவரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலம், சிவப்பு எச்சரிக்கை

மின்துறையின் கீழ் உள்ள நீர் தேக்கங்களான பத்தனம்திட்டா மாவட்ட த்தில் காகி, திருச்சூர் மாவட்டத்தில் சோலை யார், இடுக்கி மாவட்டத்தில் பெரிங்கல்குத்து, குண்டலா, கல்லார்குட்டி, மாட்டுப்பெட்டி மற்றும் கல்லாருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொன்முடி, இடுக்கி அணை மற்றும் பத்தனம்திட்டாவில் உள்ள பம்பாவுக்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சுள்ளியார் மற்றும் திருச்சூர் பீச்சியில் உள்ள நீர்ப்பாசனத் துறையின் அணை களுக்கு காலை 11 மணிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வாழனி மற்றும் சிம்மினி மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் மின்காரா, மங்கலம் மற்றும் மலம்புழா ஆகிய இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட எச்சரிக்கையான நீலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள போத்துண்டியிலும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் பெருவெள்ள முன்னறிவிப்பின்படி, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் மடமண், கல்லுப்பாறா, தும்பமண், புல்லக்கயர், மணிக்கல், திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெள்ளாயிக்கடவு, அருவிபுரம் ஆகிய பகுதிகளின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.
 

 

 


 

;