states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கியூபாவில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம்! -  ஆர்.சிங்காரவேலு

அக்டோபர் 14-இல், கியூபாவின் தலை நகர் ஹவானாவில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கானோர் பங் கேற்ற பேரணி நடைபெற்றது. கியூபாவின் இளம் கம்யூனிஸ்ட் லீக் இப்பேரணிக்கு ஏற்பாடு செய்தது. கியூபாவின் ஜனாதிபதி மிகயீல் தியாஸ் கேனல், நாடாளு மன்ற சபாநாயகர், பிரதமர்,  வெளி யுறவு அமைச்சர் மற்றும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள், வெகுஜன அமைப்புகளின் பிரதி நிதிகள் இப்பேரணியில் பங்கேற்றனர். தியாஸ் கேனல் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “காசா மற்றும் லெப னானில் நடைபெறும் இனப்படு கொலைகளுக்கு எதிராக, பாலஸ்தீன மக்களை ஒழித்துக்கட்ட முயலும் இஸ்ரேலுக்கு எதிராக, கியூபா குரல் கொடுக்கிறது” என்று பதி விட்டார். பள்ளி மாணவர் சம்மே ளனத்தின் டேனியல் கோட்டெஜ் மார்ட்டினெஜ், “நீதி கேட்டுப் போரா டும் மக்களை கண்டுகொள்ளா மல் மௌனம் காப்பது மனித குலத்திற்குத் துரோகம் செய்வ தாகும்” என்று குறிப்பிட்டார்.

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: இத்தாலி-அல்பேனியா ஒப்பந்தம்

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, புலம்பெயர்ந்தோரை அல்பேனியாவுக்கு அனுப்பும் சர்ச் சைக்குரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, வங்கதேசம் மற்றும் எகிப்தைச் சேர்ந்த 16 புலம்பெயர்ந்தோர் அல்பேனியாவின் செங்க்ஜின் துறைமுகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளனர். இத்தாலி, அல்பேனியாவில் நாடு கடத்தும் மையம், அகதிகள் பரிசீலனை மையம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை நிர்மாணிக்க நிதியளிக்கிறது. மனித உரிமை அமைப்புகள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. ‘சீ வாட்ச்’ என்ற தன்னார்வ அமைப்பு இதனை இத்தாலிய வரலாற்றின் வெட்கக்கேடான அத்தியாயம் என விமர்சிக்கிறது.பிரிட்டனின் தொழிலாளர் கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேற்குஐரோப்பிய நாடுகள் பலவும் இதேபோன்ற புலம்பெயர்ந்தோர் விரோத கொள்கைகளை பின்பற்றி வருகின்றன.

சுற்றுப்புறச் சூழலை கெடுக்கும் லித்தியம் சுரங்கம்!

அக்டோபர் 15-இல், ஜெர்மனியின் பெர்லின் மாநகரில், யூகோஸ்லாவியாவின் பகுதியான செர்பி யாவில், ரியோ டிண்டோ என்ற ஜெர்மன் பன்னாட்டு நிறுவனம் லித்தியம் சுரங்கம் துவங்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல யூகோஸ்லாவியாவின் செயல் வீரர்களும், பருவநிலை நீதி பிரச்சாரகர்களும் பங்கேற்றனர். செர்பியாவின் சுற்றுப்புறச் சூழலுக்கு, ஜெர்மனியின் லித்தியம் சுரங்கத்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்தனர். ஜெர்மன் தொழில்கள் சம்மேளனம், பருவநிலை குறித்த மாநாடு நடத்திய பெர்லின் மண்டபத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், பசுமைக் கட்சி உட்பட பங்கு கொண்டுள்ள அதிபர் ஓலாப் சூல்ட்சின் நிர்வாகம் மற்றும் தொழில் அதிபர்கள் பாசாங்கு செய்வதாகக் குற்றம் சாட்டினர். உள்நாட்டில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்து பேசும் ஜெர்மன் அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், வெளிநாட்டில் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தங்கள் நாட்டு நிறுவனங்களை கண்டும் காணாமல் உள்ளனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். செர்பியாவின் லோஜ்னிகா என்ற இடத்தில் தான் ரியோ டிண்டோ, லித்தியம் வெட்டி எடுக்கும் சுரங் கத்தை தோண்டுகிறது. இது, செர்பியாவின் விவசாயத்தை பாதிக்கும்; குடிநீர் விநியோகம் மற்றும் வாழ்வா தாரத்தை பாதிக்கும். இத்தகைய ஆபத்து இருப்பினும், ஜெர்மனி அதிபர் ஓலாப் சூல்ட்சின் நிர்வாகம் இத்திட்டத்தை ஊக்குவிக்கிறது. செர்பியா ஜனாதிபதியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பு!

தாட் (THAAD) Terminal High Altitude Area Defense missile system என்பது வானில் வரும் ஏவு கணைகளை தடுக்கும் வகையில் அமெரிக்கா உருவாக்கிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பா கும். தன்னைச் சுற்றி 150-200 கிலோமீட்டருக்குள் வரும் சிறிய, மற்றும் நடுத்தர ஏவுகணை களை கண்டுபிடித்து அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு ஆகும். அக்டோபர் 15-இல், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன், தாட் (THAAD) எனும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேலுக்கு அனுப்பு வதாக அறிவித்தது. இந்த அமைப்பை செயல்படுத்த, நூறு அமெரிக்க சிப்பாய்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார்கள். இஸ்ரேல் மீது ஏப்ரல் 13 மற்றும் அக்டோபர் 1-இல் ஈரான் நடத்திய வரலாறு காணா பதிலடி தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரே லின் பாதுகாப்பிற்காகவும், ஈரான் மற்றும் ஈரானின் நேச சக்திக ளின் ராணுவங்களின் தாக்குதல்களில்இருந்து அமெரிக்கர்களை பாதுகாக்கவும், அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

பெருவில் போக்குவரத்து வேலைநிறுத்தம்!

தென் அமெரிக்க நாடான பெருவில், கடந்த வாரம், ஆயிரக்கணக்கான டிரக் ஓட்டுநர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாட்டில் பெருகிவரும் குற்றங்கள், வழிப்பறிக் கொள்ளைகளைக் கண்டித்து தெருக்களில் இறங்கிப் போராடினர். அக்டோபர் 10-இல் போக்குவரத்து தொழிலாளர் மற்றும் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் துவங்கி, அக்டோபர் 12 வரை 72 மணி நேரம் நீடித்தது. பெரு நாட்டின் பிரதான நகரங்களில், குற்றக் குழுக்கள் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன. மாணவர் அமைப்பு மற்றும் பல்வேறு மக்கள் அமைப்புகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டன. ஜனாதிபதி தீனா பொல்வார்ட்டே அரசு மற்றும் அவரது நிர்வாகம், குற்றங்கள், மிரட்டி பணம் பறிக்கும் செயல்களைக் குறைக்க தவறிவிட்டது. புதிய குற்றம் எதிர்ப்புச் சட்டம் 32,108 குற்றங்களைக் குறைக்க உதவவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிரட்டி பணம் பறிக்கும் குற்றங்கள் ஐந்து மடங்கு உயர்ந்துள் ளன. பணம் கொடுக்க மறுத்ததால், 20 டிரக் ஓட்டுநர்கள் குற்றக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.

.அர்ஜெண்டினாவில் மக்கள் வறுமை!

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், வலதுசாரி ஜனாதிபதி ஜேவியர் மிலே, ஆட்சியில்லா நிலையே சிறந்தது என்று கருதுகிறார். அரசியல் வர்க்கத்திற்கு எதிரான புதிய மாற்று அவரே என காட்டிக்கொள்கிறார். ஆனால் நவீன தாராளமயக் கொள்கைகளையே அவர் பின்பற்றுகிறார். ஆளும் வர்க்கத்தை குறி வைப்பதற்குப் பதிலாக, அவரது கொள்கைகள் பணக்கா ரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே இடைவெளியை அதிகரித்துள்ளது; நடுத்தர வர்க்கத்தை அழிக்கி றது; ஏழை மக்களை மேலும் அடக்கி ஆளுகிறது. கடந்த 20 ஆண்டுகளிலேயே, உயர்ந்தபட்சமாக, தற்போது 53% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். விலக்கி வைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தின் (MTE) நிக்கோலஸ் காரோபிரேசி கூறுகையில், அர்ஜெண்டினா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்க ளுக்கான அரசின் உணவு உதவி நிறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புகளுக்கான அரசு நிதி, மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கான நிதி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. சுகா தார சிகிச்சை போன்ற சமூகத் திட்டங்களின் பலன்கள், முறைசாரா தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றார்.