states

img

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை - சீத்தாராம் யெச்சூரி

இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தை இடதுசாரிக்கட்சிகள் எதிர்த்தது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் விமர்சனம் செய்திருக்கிறது. அதற்குப் பதிலளித்து சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக்கட்சிகள் எதிர்த்தன. ஏனெனில் இந்த ஒப்பந்தமானது இந்தியாவின் போர்த்தந்திரரீதியான சுயாட்சிக் கொள்கையையும் இந்தியாவின் சுயேச்சையான வெளிநாட்டுக் கொள்கையையும் சமசரத்திற்கு உட்படுத்திடும் என்பதாலேயேயாகும்.  இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவால், இந்தியாவைத் தன் ராணுவ மற்றும் போர்த்தந்திரக் கூட்டணிக்குள் இழுத்துப்போடுவதற்காகக் கொண்டுவரப்பட்டதாகும். இதன்மூலம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்கு உண்மையில் எவ்விதமான பயனும் கிடையாது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள நிகழ்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நாட்டில் மக்கள்பயன்பாட்டிற்கான அணுசக்தி ஒரு மெகாவாட்கூட கூடுதலாக விரிவாக்கப்படவில்லை.. நடந்திருப்பதென்னவென்றால், இந்தியா, அமெரிக்காவின் நெருக்கமான ராணுவக் கூட்டாளியாகவும் அதன் இளைய பங்காளியாகவும் மாறியிருக்கிறது என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் போர்த்தந்திரரீதியான சுதந்திரம் ஆகியவற்றை மனதில் கொண்டுதான் இடதுசாரிக்கட்சிகள் இவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொண்டன. இதற்கும் சீனாவுடன் செய்து கொள்வதற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. இந்தியாவிற்கு அணுசக்தி விநியோகிப்பாளர்கள்குழுவினால் விலக்கு கொடுக்கப்பட்டதை சீனம் ஆதரித்தபோதிலும்கூட, இடதுசாரிக் கட்சிகள் இதுபோன்ற நிலைப்பாட்டைத்தான் எடுத்தன.

இது தொடர்பாக சீனாவின் விஜய் கோகலேயுடைய புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் இடதுசாரிகளிடம் செல்வாக்கு செலுத்தியிருப்பதாகக் கூறுவது முற்றிலும் அடிப்படையற்றதாகும். அநேகமாக, அந்த சமயத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது எது என்பதை அவர் அறியவில்லை என்றே தெரிகிறது. அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது, பாஜக-வாகும். அந்தக்கட்சியும்கூட நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை அப்போது எதிர்த்தது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

;