states

img

நாட்டின் சொத்துக்களை விற்காதீர்கள்!

பிரதமர் மோடிக்கு மத்தியத் தொழிற்சங்கங்கள் கடிதம்

புதுதில்லி, அக். 20- ஏர் இந்தியா நிறுவனம் உட்பட நாட்டின் சொத்துக்களை விற்கும் முடிவுகளைக் கைவிட வேண்டும் என்று மத்தியத் தொழிற்சங்கங் களின் கூட்டுமேடை பிரதமர் நரேந்திர மோடி யிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங் களின் கூட்டுமேடை சார்பில் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்கள் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டி ருப்பதாவது: ஒன்றிய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் மேலாண்மை துறையைச் சேர்ந்த  செயலாளர் அக்டோபர் 8 அன்று செய்தியாளர் கள் கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் டாலாஸ் பிரைவேட்  லிமிடெட் நிறுவனம் வெற்றி பெற்றி ருப்பதாக அறிவித்தார். இதன்மூலம் இதனை வாங்குவதற்காக முன்பு ஏலம் எடுத்திருந்த நிறுவனங்கள் அடிபட்டுப்போய்விட்டன.

இந்த அறிவிப்பு தொடர்பாக கார்ப்ப ரேட்டுகளும், ஊடகங்களும் இவ்வாறு ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்படுவதற்குத் தங்கள்  மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள அதே சமயத்தில், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியின்றி இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கான காரணங்கள் வருமாறு:

(1)“வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தின் வேலை இல்லை” என்கிற உங்களின் தத்துவம் கூறுகிறது. எனவேதான் நீங்கள் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் விற்பது  என்று முடிவு செய்திருக்கிறீர்கள். நட்டம்  ஈட்டும் நிறுவனங்களைத்தான் விற்கிறோம் என்று சாக்குப்போக்கு சொல்வது போலித் தனமானதாகும். வாஜ்பாய் தலைமையில் அமைந்திருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்த சென்டார் ஓட்டலை விற்றதும், அப்போது பொதுச்சொத்துக்களைத் தனி யாருக்குத் தாரைவார்ப்பதற்காகத் தனியாகவே ஓர் அமைச்சகம் இருந்ததும் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.

(2) உங்கள் அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்று முடிவு எடுத்த பின்னரும்கூட, 2019-20இல் ஏர் இந்தியா நிறுவனம் 1,787 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது.

(3) ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் பெரிய அளவில் கடன் சுமை ஏற்பட்டிருப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட பின்வரும் கொள்கைகளே காரணங்களாகும்.

(அ) 2005-2006இல் ஒரே சமயத்தில் 111 விமா னங்களை ஏர் இந்தியா நிறுவனத்திற்காகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காகவும் வாங்குவது என்று முடிவினை மேற்கொண்டது.

(ஆ) ஓராண்டு கழித்து ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக்கிட அரசாங்கம் நிர்ப்பந்தித்தது.

(இ) இந்தியாவின் வான்வெளியை அனைத்து நாட்டு விமான நிறுவனங்களுக்கும் திறந்து விட்டது. ஆனால் வெளிநாடுகள் எதுவும் அதேபோன்று இந்தியாவின் நிறுவனங்  களுக்கு வான்வெளியைத் திறந்துவிட வில்லை.

(ஈ) எல்லாவற்றிற்கும் மேலாக தனியார் விமான நிறுவனங்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக ஏர் இந்தியா மற்றும் இந்தியன்  ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் நலன்களைக் காவு கொடுத்தது.

(4) எப்படியாவது அடிமாட்டுவிலைக்காவது ஏர் இந்தியா நிறுவனத்தை விற்றுவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன், அரசாங்கம் மேலே  கூறியவாறு தான் மேற்கொண்ட நடவடிக்கை களை மூடிமறைத்திட முயற்சித்தது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பது தொடர்பான பரிவர்த்தனைக்குக் கடும்போட்டி நிலவுவ தாக நிதி அமைச்சத்தின் தரப்பில் கூறப்பட்டபோதிலும், உண்மை நிலைமை கள் அப்படி இல்லை. ஏழு நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. அவற்றில் ஐந்து அரசாங்கம் நிர்ணயித்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்திடவில்லை. இதர இரு நிறு வனங்களில் ஒன்று ஸ்பைஸ் ஜெட். இந்நிறு வனம் தற்போது கடனில் மூழ்கிக் கொண்டி ருக்கிறது. மேலும் அதன் ஏலத்தொகை வெறும் 15,100 கோடி ரூபாயாகும். உண்மையில், அரசாங்கம் நிர்ணயித்த குறைந்தபட்ச ஏலத்தொகை 12,906 கோடி ரூபாயாகும். இவ்வாறு ஏர் இந்தியா நிறுவனம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருப்பது தெளிவாகும்.

    ஏர் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 141 விமானங்கள் சொந்தமாக இருக்கின்றன. இவற்றில் 118 விமானங்கள் மிகவும் நல்ல நிலைமையில் இயங்கக்கூடியவைகளாகும். அதேபோன்று இந்நிறுவனத்தின் சார்பில் சர்வதேச அளவில் இயக்கப்பட்டுவந்த ஏர்பஸ்கள் மற்றும் போயிங் 737-கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் இயங்கிவந்த அனைத்தும் புதிதாக வாங்கப்பட்ட விமானங்களாகும்.

    இவ்வாறு இந்திய அரசு, டாடா நிறுவனத்திற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களையும், நாட்டிற்குள் 4,400 வழித்தடங்களையும், சர்வதேச அளவில் 1800 வழித்தடங்களையும், இந்தியா விற்குள்ளிருந்த அனைத்து விமானத் தளங்களிலும், சர்வதேச அளவில் 900 விமானத் தளங்களிலும் இயங்கிவந்த ஏர்  இந்தியா விமானங்களைத் தாரை வார்த்திருக்கிறது.

14 ஆயிரம் ஏர் இந்தியா ஊழியர்களின் கதி என்ன?

(5) எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமான அம்சம், இதுநாள்வரையிலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிவந்த நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த 14  ஆயிரம் ஊழியர்களின் கதி நிச்சயமற்று இருப்ப தாகும். “ஊழியர்களின் நலன் பாது காக்கப்படும்” என்று அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அவர்களின் எதிர்காலம் குறித்து எவ்விதமான முடிவும் அறிவிக்கப்படவில்லை.

    20.09.2021 தேதியிட்ட சிவில் விமானப் போக்கு வரத்து அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை ஒன்று ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்கள் வசிப்பிடங்களை ஆறு மாத காலத்திற்குள் காலி செய்திட வேண்டும் என்று அனுப்பப்பட்டிருக்கிறது. இதே ஊழியர்கள்தான் ஆபத்தான நிலைமைகளில் சிக்கிக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றி வந்தவர்கள் என்றும், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தில் வந்தே பாரத் விமானம் மூலம் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்து வந்தவர்கள் என்பதையும் அரசாங்கம் தயவுசெய்து நினைவுகூர்ந்திட வேண்டும். சிவில் விமானப்போக்குவரத்துத் துறையின் சுற்றறிக்கைத் திரும்பப் பெறப்பட வேண்டும்.  ஊழியர்களை விரட்டியடிக்கக் கூடாது.

இவ்வாறு ஏர் இந்தியா நிறுவனத்தையும் மற்றும் நாட்டின் இதர சொத்துக்களையும் விற்பது என்று எடுத்திருக்கும் முடிவினை  உங்கள்  அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள் ளது. (ந.நி.)

;