ஸ் டேட் வங்கியில் வெறும் ஆயிரம் ரூபாய் செலுத்துகிற ஒருவரின் சலானில் சிறிய எழுத்துப் பிழை இருந்தாலும் சரி செய்யும்வரை ஏற்பதில்லை. உண்மையில், அது சலிப்பாக இருந்தாலும், அனைத்தும் சரியாக இருப்பதுதான் நம் கணக்கில் சரியாக வரவு வைக்க உதவும் என்று புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனால், ஆயிரம் ரூபாய்க்கு அத்தனை கேள்விகள் கேட்ட அதே ஸ்டேட் வங்கி, பல நூறு கோடி ரூபாய்களுக்கான தேர்தல் பத்திர கணக்குகளை வரவு வைத்திருக்கிற விதத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. • உதாரணமாக வேதாந்தா லிமிட்டெட் என்று சில நூறு கோடி ரூபாய்களுக்கான பதிவு இருந்தது. நியூஸ்லாண்டரி தளம் குறிப்பிட்டதைவிட வேதாந்தா வாங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு குறைகிறதே என்று தேடினால், வேதாந்தா லிட்(எல்டிடி!) என்று சில நூறு கோடி ரூபாய்கள் வரவு வைக்கப்பட்டுள்ளன.
• மேகா என்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிட் என்ற பெயரில் பல நூறு கோடி ரூபாய்களும், அந்த அண்ட் என்பதை எழுத்துகளால் அன்றி குறியீட்டில் குறிப்பிட்டு சில நூறு கோடி ரூபாய்களும் பதிவாகியிருக்கின்றன.
• பிர்லா கார்பன் இண்டியா லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிற ரூ.105 கோடிக்கான பத்திரங்கள், பெயரிலுள்ள சொற்களுக்கிடையே இடைவெளிகள் எதுவுமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏர்டெல் வாங்கியிருக்கிற பத்திரங்களில் ஒரு பகுதியில் பார்தி ஏர்டெல் லிமிட்டெட்ஏர்டெல் கரண்ட் அக்கவுண்ட் எண்... என்று பதிவாகியிருக்கிறது. ஆங்கில சொற்கோவையில்(ஸ்பெல்லிங்) இடைவெளியில்லாத சொற்களைப் படிக்கும் போது, வேறு சொல்லாவிடும் என்பதால், மிகுந்த குழப்பத்தை இந்தப் பதிவுகள் ஏற்படுத்துகின்றன. வேறு சில நிறுவனங்களுக்கு கம்பெனி லிமிட்டெட் என்று பாதி பதிவுகளிலும், மீதியில் கோ. லிட். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. “டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் லிட்” என்று சில இடங்களிலும், “டாக்டர். ரெட்டி’ஸ் லேபரட்டரீஸ் லிமிட்டெட்” என்று பல இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையெல்லாம்கூட வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிற குறியீடுகள், சுருக்கங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். சில நிறுவனங்களின் பெயரிலேயே எழுத்து விடுபடுதல் நடந்திருக்கிறது.
அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் லிட் என்று சில பதிவுகளிலும், அந்த “எஸ்”ஐ தவிர்த்துவிட்டு, அல்ட்ரா டெக் சிமெண்ட் லிட் என்று சில பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையும் புரிந்துகொள்ளக்கூடாது என்று “ULTRATEC&CEMENTSLTD” என்று மொத்தமாக, இடைவெளியே இன்றி இருப்பதெல்லாம் கவனப் பிசகு என்றுகூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தத் தரவுகள்தான் வெளியில் வரப் போவதில்லையே என்று மிக அலட்சியமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது, வெளியில் வந்தாலும், கண்டு பிடிக்கக்கூடாது என்று திட்டமிட்டு, மாற்றி மாற்றிப் பதிவு செய்திருக்க வேண்டும். இந்தத் தரவுகளைத் தருவதற்கு ஸ்டேட் வங்கி நிர்வாகம் காட்டிய தயக்கங்களைப் பார்த்தால், தொடக்கத்திலிருந்தே திட்டமிட்டு, குழப்படியாக இந்தக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது. அதனாலேயே, வாங்கியவர், பெற்றவர் ஆகிய விபரங்களைப் பொருத்த முடிந்த 18,741 பத்திரங்களை ஆய்வு செய்தாலும், ஒரு நிறுவனம் கொடுத்த நிதி இவ்வளவுதான் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. நிறுவனத்தின் உரிமையாளர் பெயரில், இயக்குனர்கள் பெயரில் என்றெல்லாம் உள்ளவற்றை ஓரளவுக்குத்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆகவே, தேர்தல் பத்திரங்களாகவும், பிற வழிகளிலும் பாஜக வாங்கியுள்ள நிதி என்பது மாபெரும் பனிப்பாறையாகவும், அதன் வெளித் தெரிகிற மிகச்சிறிய முனைதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை என்றும்தான் அச்சமளிக்கின்றன!