states

முதல் நாளிலேயே 12 எம்.பி.,க்கள் இடைநீக்கம்

புதுதில்லி, நவ.29- மாநிலங்களவையில் திங்களன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பிக்கொண்டேயிருந்தனர். இதை அமளி என மாநிலங்களவைத் தலைவர் கூறினார். இந்த நிலையில்,  கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் ‘கண்ணியக்குறைவாக ’நடந்து கொண்டதாக  எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 12 உறுப்பினர்களை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து  இடை நீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் விவரம்:

எளமரம் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ஆர்.போரா, ராஜாமணி படேல்,   சையத் நசீர் உசேன், அகிலேஷ் பிரசாத் சிங் (காங்கிரஸ்), பினோய் விஸ்வம் - (சிபிஐ), டோலா சென், சாந்தாசேத்ரி (திரிணாமுல்), பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் (சிவசேனா)

மு.க.ஸ்டாலின் கண்டனம்

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வைக் குறைக்கின்றன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக  தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கையே மேலும் மேலும் அம்பலப்படுத்துகிறது என பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

;