states

அயோத்தியில் பல நூறுகோடி ரூபாயை சுருட்டிய பாஜக மேயர், எம்எல்ஏ-க்கள்!

அயோத்தி, ஆக. 9 - அயோத்தி மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள சட்டவிரோத நில  வியாபாரிகள் பட்டியலில், அயோத்தி யின் பாஜக மேயர், பாஜக எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏ உள்பட 40 பேர் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள், அயோத்தியில் சட்ட விரோதமாக நிலங்களை விற்பனை  செய்ததாகவும், நிலத்தில் உள்கட்ட மைப்புகளை ஏற்படுத்தியதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இவை தொடர்பாக 2022-ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, 2021 டிசம்பரிலேயே, ஊட கங்களில் செய்திகள் வெளியாகின.  அயோத்தியில் ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் நிலம் கையகப்படுத்துதலில், அறக்கட்டளை நிர்வாகிகளும், பாஜக தலைவர்களும் பல நூறுகோடி ரூபாய் அளவிற்கு ஊழல் - முறைகேட்டில் ஈடுபட்டுள்ள னர்.  அதாவது, ராமர் கோயில் வளா கத்திற்காக கோயில் அறக்கட்டளை யானது, பல நூறு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கவுள்ளதை அறிந்து, இந்த இடங்களை முன்கூட்டியே குறை ந்த விலைக்கு வாங்கிப் போட்டனர். குறிப்பாக நவம்பர் 9, 2019 அன்று பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இவர் கள் அயோத்தியில் மொத்தம் மொத்த மாக நிலம் வாங்கிக் குவித்தனர். 

இவ்வாறு நிலம் வாங்கிய அர சியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் 2021 டிசம்பரிலேயே வெளி யாகின. பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தாவின் மருமகன் தருண் மிட்டல் நவம்பர் 21, 2019 அன்று பர்ஹாதா  மஞ்சாவில் 5,174 சதுர மீட்டர் நிலத்தை ரூ. 1.15 கோடிக்கு வாங்கினார். அதேபோல், டிசம்பர் 29, 2020 அன்று, 5 கிமீ தொலைவுக்கு அருகில் உள்ள மகேஷ்பூரில் (கோண்டா) 14,860 சதுர மீட்டர் நிலத்தை 4 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதேபோல அயோத்தி மாநகர மேயர் ரிஷிகேஷ் உபத்யாய், ராமர் கோவில் இடம் அருகில், செப்டம்பர் 18, 2019 அன்று 1,480 சதுர மீட்டரை ரூ.30 லட்சத்திற்கு வாங்கினார் என்று அந்த செய்திகள் தெரிவித்தன. ராமர் கோயில் பெயரில் பாஜக-வினர் அரங்கேற்றும் இந்த ஊழல் முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஜூலை 31 அன்று உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு, அயோத்தி எம்.பி. லல்லு சிங் கடிதம் ஒன்றை அனுப்பினார். “நில மாபியாக்கள் சட்ட விரோதமாக நிலத்தை விற்பது மற்றும் வாங்கியது குறித்து சிறப்பு புல னாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த வேண்டும்” என்று அதில் அவர்  வலியுறுத்தி இருந்தார். 

அயோத்தியில் உள்ள ஜம்தாரா முதல் கோலாகாட் வரை இவ்வாறு சட்டவிரோதமாக நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருப்பதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். “நில மாபியாவின் செல்வாக்கு என்ன வென்றால், முன்னர் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் - ஊழியர்களுடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் தயாரித்து, மக்களை ஏமாற்றி, அவர் களின் பெயரில் நிலம் வாங்கப் பட்டுள்ளது. ஜம்தாரா காட் மற்றும் கோலாகாட் இடையே உள்ள நிலங் களில் நில மாபியாவின் வியாபாரம் செழித்து வருகிறது” எனவும் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் விஷால் சிங் பெயரில், அயோத்தியின் சட்டவிரோத நில வியாபாரிகள் தொடர்பான பட்டியல் ஒன்று சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில், அயோத்தி பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய், பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, மில்கிபூரின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வான கோரக்நாத் பாபா உள்ளிட்ட 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக, ஞாயிற்றுக்கிழ மையன்று பிடிஐ செய்தி நிறு வனத்திற்கு பேட்டி அளித்துள்ள அயோத்தி மேம்பாட்டு ஆணையத் தலைவர் விஷால் சிங், “அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்த மான பகுதியில் சட்டவிரோதமாக நிலத்தை வாங்கி, விற்பனை செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட 40 பேரின் பட்டியலை ஆணையம் சனிக்கிழமை இரவு வெளியிட்டது. இந்த 40 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

இது உ.பி. அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோத நில வியாபாரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பாஜக தலைவர்கள் மீது அக்கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட உ.பி. மாநில எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. “அயோத்தியில், பாஜகவின் மேயர்,  உள்ளூர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர், நில மாபியாக்களு டன் இணைந்து, சட்டவிரோத காலனிகளை நிறுவி வருகின்றனர். இதில் தொடர்புடைய துறைகளுடன் இணைந்து, 30 சட்ட விரோத காலனிகள் அமைக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு  ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்விவ காரம் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமாஜ்வாதி கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவராக அகிலேஷூம், “நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளோம், மீண்டும் மீண்டும் சொல்கிறோம். பாஜக?வின் ஊழல்வாதிகள் குறைந்தபட்சம் அயோத்தியையாவது விட்டு விடுங்கள்” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். எந்த நில பேரங்களிலும் எனக்கு பங்கு இல்லை. என்னை வழக்கில் சிக்க வைக்க சதி என்று பாஜக எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தாவும், “இதுபோன்ற சட்டவிரோத நில பேரங்களில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று அயோத்தி மாநகர பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயும் அலறியுள்ளனர்.

;