states

img

25 ஊராட்சிகளுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியம் அமைத்திடுக!

சிவகங்கை, ஆக.7-  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 10 ஆவது மாநில மாநாடு சிவகங்கையில் ஆகஸ்டு 5, 6 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.  மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.ரமேஷ், மாநில பொதுச்செயலாளராக ச.பாரி, மாநில பொருளாளராக விஜயபாஸ்கர், மாநிலத் துணைத்தலைவர்களாக மு.செல்வக்குமார், ந.திருவேரங்கன், எம்.பழனியப்பன், எஸ்.காந்திமதி நாதன், வெ.சண்முகசுந்தரம், இரா.ஆறுமுகம், ஜெ.பாஸ்கர்பாபு, மாநிலச் செயலாளர்களாக அ.சௌந்தரபாண்டியன், ந.ஜெய்சங்கர், எஸ்.ராஜசேகரன், எஸ்.புகழேந்தி, வே.செந்தில்குமார், ஜ.ஜம்ரூத்நிஷா,மு.வீரகடம்பகோபு, . மாநில தணிக்கையாளர்களாக கி.சோமநாதன், கு.சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

மாநாட்டின் நிறைவாக டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து 25 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்ற பேரணி துவங்கி நடைபெற்றது.  காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது. பேரணியை மாநில முன்னாள்  தலைவர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியின் நிறைவாக மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  நீலகிரி மாவட்ட ஊழியர்களின் கலை நிகழ்ச்சி, புதுகை பூபாளம் நையாண்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன்,  சங்கத்தின் மாநில தலைவர்  ரமேஷ், மாநில பொதுச் செயலாளர் பாரி, மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் ,மாநில செயலாளர் செல்வகுமார், சிவகங்கை மாவட்ட தலைவர் வேலுச்சாமி ஆகியோர் பேசினர்.  மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முன்னாள் மாநிலத் தலைவர்  சுப்பிரமணியன்  மீதான அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்து பணி ஓய்வில் செல்ல அனுமதிக்க வேண்டும்.  வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் இரவு நேர ஆய்வுகள் வாட்ஸ்அப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் முற்றாக கைவிட வேண்டும்.  ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஊராட்சிகளுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியம் என்கிற விகிதத்தில் ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படவேண்டும்.வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். உதவி இயக்குநர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை காலதாமதமின்றி வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;