states

img

நூல் விலை உயர்வை கண்டித்து பேண்டேஜ் உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

இராஜபாளையம், அக்.21- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன.  சுமார் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்களை வைத்து பேண்டேஜ் உற்பத்தி செய்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். நூல் விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக  உயர்ந்த தாலும், பேண்டேஜ் உற்பத்திக்கான மூலப் பொருட்களின் கடுமையான விலை ஏற்ற த்தை கண்டுள்ளதாலும், தொழில் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள் ளன. இதனால் சைசிங் உள்பட இதர தொழிற் சாலைகளும் பாதிக்கப்பட்டு, சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். இதன் காரணமாக நாளொன்றுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள பேண்டேஜ் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசு நூலுக்கு போடப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கவேண்டும், நூல் விலை உயர்வுக்கு காரணமான தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், இராஜபாளையம் பகுதியில் விசைத்தறி தொழில் பூங்கா உருவாக்கிட வேண்டும், வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி சிஐடியு விருதுநகர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சங்கரபாண்டியாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் தலைமை தாங்கினார். விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சோமசுந்தரம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஜி.கணேசன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் எம்.முனியாண்டி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநில துணைத்தலைவர் எம்.மகாலட்சுமி நிறைவுரையாற்றினார். இதில், எஸ்.ஜீவானந்தம், கே.மாரிமுத்து, எஸ்.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;