states

நூற்றாண்டு காணும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தடம்பதித்த பாதையில் முன்னேறுவோம்!

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அத்தலைவர்களது அர்ப்பணிப்பு, தியாகப் பெருவாழ்வு, வீரஞ்செறிந்த போராட்டங்கள், கொடுஞ்சிறை, தலைமறைவு வாழ்க்கையின் அனுபவங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், அவர்களது தடம் பதித்த பாதையில் உறுதியுடன் முன்னேற சபதம் ஏற்றிடவும் வாய்ப்பாக இவ்விழாக்கள் அமைந்திடும் என்பது தெளிவு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப் பிந்தைய சுதந்திர இந்தியாவில் பல்வேறு கட்சிகளின் தலைமையிலான ஆட்சி  மாற்றங்களின் போதும் , இந்திய பாட்டாளி வர்க்க மக்களின் சமூக, பொருளாதார விடுதலைக்காக இடைவிடாமல் களம் கண்டு வருகிற பெருமைமிகு இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கமாகும். இந்த மாபெரும் இயக்கத்தின் தலைவர்களாக இருந்து வழி நடத்தியவர்கள் இந்தியாவின் மகத்தான தியாக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்; தங்கள் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த தியாகத் தழும்புகளை பெற்றவர்கள்; விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப் பிந்தைய நாட்களில் உழைப்பாளி வர்க்கத்தின் நலனுக்கான போராட்டங்களிலும் புடம் போடப்பட்ட - அப்பழுக்கற்ற வைரங்களாக, மாணிக்கங்களாக ஜொலித்தவர்கள்.

1344 ஆண்டுகள் சிறையில்...

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொடூரமான அடக்குமுறைகளை சந்தித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோதே அதை கிள்ளி எறிவதற்காக பிரிட்டிஷ் ஆட்சி அடக்குமுறைகளை ஏவியது. 1920 தாஷ்கண்ட் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை உருவான உடனே அதற்கு தடை விதித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதைத் தொடர்ந்து பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு என அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது சதி வழக்குகளை புனைந்து நாடு முழுவதும் உள்ள சிறைக் கொட்டடிகளில் கம்யூனிஸ்ட்டுகளை அடைத்தது. அந்தமான் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்நாள் முழுவதையும் சிறைக்கொட்டடியிலேயே கழித்த கம்யூனிஸ்ட் தியாகிகள் எண்ணற்றோர். கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது அகில இந்திய காங்கிரஸ் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலக்காடு நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மொத்தம் 407 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். இவர்கள் அனைவரும் சிறையில் மொத்தத்தில் 1344 ஆண்டுகளை கழித்துள்ளார்கள். அதாவது சராசரியாக ஒவ்வொரு பிரதிநிதியும் மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றுள்ளார்கள். அதேபோன்று பிரதிநிதிகள் மொத்தமாக 1021 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துள்ளார்கள். அதாவது, சராசரியாக ஒவ்வொரு பிரதிநிதியும் 2 1/2 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை கழித்துள்ளதாக மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தகுதி ஆய்வு படிவத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியையும், அதற்குப் பிறகு உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்திய, தலைமையேற்று எண்ணற்ற போராட்டங்களை நடத்திய மகத்தான தலைவர்களின் அர்ப்பணிப்பும் மக்கள் பணியும் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பவை. தமிழகத்தைப் பொறுத்தவரை தோழர்கள் சிங்காரவேலர், ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரய்யா, ஆர்.உமாநாத், பி. ராமச்சந்திரன், வி.பி. சிந்தன், கே. ரமணி, கே.பி. ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், சி. கோவிந்தராஜன் உள்ளிட்ட  தலைவர்களில் துவங்கி எண்ணற்ற தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றி லும் தமிழகத்தின் மேம்பாட்டிலும் பெருமைமிகு பங்களிப்புகளைச் செய்தவர்கள்.

தமிழகத்தின் வளர்ச்சியில்...

அன்றைய காலக்கட்டத்தில் ஆலை முதலாளிகள் தொழிலாளர்கள் மீது சுரண்டலையும் ஒடுக்குமுறைகளையும் ஏவினர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குவித்து வைத்திருந்த பண்ணையார்கள், தங்களது நிலங்களில் வேலை செய்த பண்ணை ஆட்களை, குத்தகை விவசாயிகளை, விவசாயத் தொழிலாளர்களை கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாக்கினர். இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழக பாட்டாளி மக்களை தலைநிமிரச் செய்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள், அதற்காக செய்த தியாகங்கள் அளப்பரியவை. ஒவ்வொருவரின் வரலாறும் அற்புதமானவை. இன்றைக்கு தொழிலாளி வர்க்கம், விவசாய மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகள், மனித உரிமைகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் இயக்கமும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் போராடிப் பெற்றுத் தந்தவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. தமிழ்ச்சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கம்யூனிஸ்ட் இயக்கமும் அதன் தலைவர்களும், ஊடுபாவாக - இரண்டறக் கலந்தவர்கள். 2021 ஜூலை 15 அன்று நூற்றாண்டு கண்டிருக்கின்ற மகத்தான தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவராக பயின்ற காலத்திலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். தனது வாழ்நாள் முழுவதிலும் அப்பழுக்கற்ற தூய வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர். தொண்டால் பொழுதளந்தவர். தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவர்.

மனைவியையும், தாயையும் பார்க்க முடியாமல்...

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன்,  கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகாலம் மாநிலச் செயலாளராக செயலாற்றியவர். அவர் தலைமறைவாக செயல்பட்ட காலத்தில் அவரது  மனைவி சாரதா அவர்கள் உடல்நலம்குன்றி மரணப்படுக்கையில் இருந்தார். கடைசியாக தமது கணவரைப் பார்க்க விரும்பினார். மனைவியை பார்க்க வரும் போது கைது செய்ய காவல்துறை தயாராக இருந்தது. எப்படியோ ஒரு வாய்ப்பை உருவாக்கி காவல்துறை யின் கண்ணில் மண்ணைத் தூவிச் சென்று மனைவியைச் சந்தித்தார். தனது கணவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவரது மனைவி உற்சாகமடைந்தார். அதேசமயம் அச்சம் அவரை வாட்டியது. ஒருவேளை இந்நேரத்தில் கணவரை காவல்துறை கைது செய்து  விடுமோ என்ற அச்சத்தில், நீங்கள் உடனே சென்று விடுங்கள், சாவதற்கு முன்னால் உங்களை பார்த்துவிட்டேன், இனிமேல் நான் நிம்மதியாகவே சாவேன்; உங்கள் கொள்கைப் பயணத்தில் உறுதியாக செயல்படுங்கள் என கூறி கண்ணீர் மல்க அனுப்பி வைத்தார். அதற்கு பிறகு சில மாதங்களில் எம்.ஆர்.வெங்கட்ராமன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மனைவி மரணமடைந்த செய்தியும் கிடைத்தது. இறுதி நிகழ்ச்சிக்கு செல்வதற்காக முயற்சித்த போது பிரிட்டிஷ் அரசு அனுமதி தர மறுத்து விட்டது. மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்கும் வாய்ப்பின்றி சிறையில் வாடினார். அப்போது எம்.ஆர்.வெங்கட்ராமனின் மகள் பாரதிக்கு ஒன்றரை வயது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்.ஆர்.வெங்கட்ராமன் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் தனது மகளைப் பார்க்க முடிந்தது.

ஒன்றாக சிறையிலிருந்த பாப்பாவும், அவரது தாய் லட்சுமியும் சிறைக்கொடுமைகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். 23ம் நாள் உண்ணாவிரதத்தின் போது அன்னை லட்சுமி மரணமடைந்து விட்டார். இறந்த தாயாரின் முகத்தைப் பார்க்க துடித்தத் பாப்பாவுக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இப்படி கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகப்பூர்வமான வாழ்க்கையைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமல்ல, முகம் தெரியாத எத்தனையோ தோழர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீரர்களாக, தீரர்களாக தமிழகம் முழுவதும் ஆற்றிய பணிகள்தான், இன்றைக்கு இந்த மாநிலத்தில் உழைப்பாளி மக்கள் ஓரளவிற்கு கவுரவமான, சுயமரியாதையான சமூக வாழ்வியலைப் பெற அடிப்படைக் காரணம் என்றால் மிகையல்ல. இந்தப் பின்னணியில்தான் நூறாண்டுகள் நிறைவுபெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்களின் நூற்றாண்டு விழாக்களை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. வாழும் வரலாறாக நம்முடன் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இருக்கிறார். அவரது நூற்றாண்டுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் தலைவர்களாக செயலாற்றி மறைந்த தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், ஆர்.உமாநாத், ஏ.நல்லசிவன், சி.கோவிந்தராஜன், கே.முத்தையா  உள்ளிட்ட  பல தலைவர்களின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. வேர்களுக்கு விழுதுகளின் செவ்வணக்க விழாக்களாக இவை அமையும். அவர்களது தியாக வாழ்வு மட்டுமின்றி அவர்களது எழுத்துக்கள், கட்டுரைகள், உரைகளை தொகுத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பேரியக்கமாக இவ்விழாக்கள் அமையும். நூற்றாண்டு காணும் இந்தத் தலைவர்களின் பாதையில் தமிழகத்தில் செங்கொடி இயக்கத்தை மேலும் மேலும் முன்னேற்றிச் செல்ல உறுதியேற்போம்.!


 

;