states

img

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக வலுவான தலையீடு... கேரள முதல்வர்.....

திருவனந்தபுரம்:
மத்திய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக கேரள அரசு வலுவான தலையீடு மேற்கொண்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டப்பேரவையில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக உறுப்பினர் எஸ்.சர்மா கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து முதல்வர் மேலும் கூறியதாவது: ரயில்வே, எரிசக்தி, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற தவறான கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் அதிகரித்து வரும் போராட்டங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாததுபோல் நடிக்கிறது. கேரளத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு தனது கவலையைமத்திய அரசுக்கு பலமுறை தெரிவித்துள்ளது.

கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கிய பிபிசிஎல் விற்பனைக்கு உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமும் மகாரத்னாவுமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலாபத்தில் செயல்படும் நிறுவனமாகும். கொச்சி சுத்திகரிப்பு நிலையம் தனியார் மயமாக்கப்பட்டால், கிப்பி நிதியுடன் தொடங்கப்படும் பெட்ரோ கெமிக்கல் பூங்காவின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும். தனியார்மயமாக்கலில் இருந்து விலகுமாறு பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சருக்கு இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டது. நவம்பர் 19, 2019 அன்று,கேரள சட்டப்பேரவை ஒருமனதாகமத்திய அரசுக்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, இந்த நிறுவனத்தை பொதுத்துறையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தேசிய நலனுக்காகவும், மாநிலத்தின் சிறப்பு நலனுக்காகவும் பங்கு விற்பனை செயல்முறையிலிருந்து விலக வேண்டும் என்றும்அத்தீர்மானம் கோரியது.

இதுபோன்ற தவறான கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்தாலும், மூடும் நிறுவனங்களை கையகப்படுத்தி பொதுத்துறையில் வைத்திருக்க மாநில அரசு முயற்சிக்கிறது என்று முதல்வர் கூறினார். கோட்டயத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் நியூஸ்பிரிண்டில் பங்குகளை விற்பனை செய்வதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும், தனியார்மயமாக்கல் செயல்முறைக்கு முன்னேறியது. நிறுவனத்தின் சொத்துக்களை தானாக முன்வந்து கையகப்படுத்த கேரள அரசு விரும்பினாலும், விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் அந்நிறுவனம் நொடித்துத் தீர்க்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டது. முன் தீர்மானத்திட்டத்தை அரசு சமர்ப்பித்துள்ளது. அதற்கு கடன் வழங்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு கடன்வழங்குநர்கள் குழுவின் பரிந்துரையுடன் இந்துஸ்தான் செய்தித்தாள்நிறுவனத்தை வாங்குவது சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது.பாலக்காடு இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட் கையகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டாலும், நேர்மறையானபதில் எதுவும் கிடைக்கவில்லை. தொழில்துறை நோக்கங்களுக்காக மாநில அரசு கையகப்படுத்திய 123 ஏக்கர் நிலத்தின் விலையை கூடுதலாகக் கோருவது என்கிற நிலைப்பாடு மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய– மாநில அரசுகளின் கூட்டு நிறுவனமான காசர்கோடு பெல்-இ.எம்.எல் (BHEL-EML) உள்ள தனது பங்குகளை விற்கமத்திய அரசு முடிவு செய்தபோது, பெல் நிறுவனத்தில் 51 சதவிகிதபங்குகளை வாங்க மாநில அரசுமுடிவு செய்தது. இதற்கான வரைவுஒப்பந்தம் இன்னும் மத்திய அரசால் இறுதி செய்யப்படவில்லை. நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் பெல்,நிறுவனத்திடம் நிர்வாக பொறுப்புஉள்ளது. எவ்வாறாயினும், நிறுவனத்தின் சரிவை சமாளிப்பதற்கும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பணி மூலதனமாக ரூ.6.8 கோடியை இந்த கூட்டு நிறுவனத்திற்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு சொந்தமான பாலக்காட்டில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(BEML) ஐ தனியார்மயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கடிதத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கை முழு வீச்சில் உள்ளது. இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் இந்த நிறுவனத்தை தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு பொதுத்துறையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி மற்றொரு கடிதம் 05.01.2021அன்று பிரதமருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. மத்திய அரசின் தொடர்ச்சியான தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாநிலஅரசு சாத்தியமான எல்லா வழிகளிலும் தலையிட்டுள்ளது. மேலும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறினார்.

;