states

img

கேரளத்தில் ஓட்டு விற்பனையில் ஈடுபட்ட பாஜக.... முதல்வர் பினராயி விஜயன் பகிரங்க குற்றச்சாட்டு.....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் பாஜக ஓட்டு விற்பனையில் ஈடுபட்டதாகவும், வாக்குகளை மாற்றிக் கொடுக்க பாஜக முன்வராமல் போயிருந்தால் யுடிஎப்பின் வீழ்ச்சி மிகமோசமாக இருந்திருக்கும் என கேரளமுதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திருவனந்தபுரத்தில் திங்களன்று (மே 4) நடந்த ‘மீட் பிரஸ்’ என்கிற பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் மேலும்கூறியதாவது: 

கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்குகளின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது. ஆனாலும், பாஜகவின் வாக்குகள் குறைந்திருப்பது பெரியஅளவில் வாக்கு விற்பனை நடந்திருப்பதைக் காட்டுகிறது. பாஜகவின் வாக்குகளை மாற்றியமைத்ததன் மூலம் யுடிஎப் 10 இடங்களை வெல்ல முடிந்தது என்றுபுள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது இல்லாமல் போயிருந்தால் யுடிஎப் இதைவிட மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.பாஜக பெரும் முன்னேற்றத்தை ஈட்டுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் நேரத் தில், கேரளத்தில் பாஜகவின் வாக்கில் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளது. விவரங்களைப் பார்த்தால், இந்த வாக்கு வாங்கலின் மூலம் யுடிஎப் வெற்றி பெறமுடியும் என்று நம்பியது தெரியவருகிறது. மதச்சார்பின்மையில் உறுதியாகவேரூன்றிய கேரளம் எல்டிஎப்புக்கு உறுதுணையாக நின்றது. அதனால்தான் ஓட்டு வர்த்தகத்தால் நிறுவப்பட்ட எதிர் தரப்பினரின் கனவு சிதைந்துள்ளது.

குண்டாறா தொகுதியில் பாஜகவின் 14,160 வாக்குகள் குறைந்தன. யுடிஎப்4454 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. திருப்புணித்துறையில் யுடிஎப் 992 வாக்குகள் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. இங்கு பாஜக 6087 வாக்குகளை இழந்துள்ளது. பாலாயில் ஜோஸ் கே மாணி தோல்வி அடைய காரணமும் பாஜக வாக்குகளை மாற்றி அளித்ததுதான். பெரும்பாவூரிலும் வாக்கு மாற்றி அளிக்கப்பட்டுள்ளது. கடுத்துருத்தி தொகுதியில் பாஜகவுக்கு 5866 வாக்குகள் குறைந்தன. யுடிஎப் 4256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாஜக வாக்குகள் கிடைக்காவிட்டால் யுடிஎப் இன்னும் மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் பாஜக ஓட்டுகள் மாற்றப்பட்ட போதிலும் எல்டிஎப் வென்ற தொகுதிகளும் உள்ளன. தவனூரில் பாஜகவின் 5887 வாக்குகள் குறைந்தன. அங்கு எல்டிஎப் 2564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொய் லாண்டி மற்றும் குட்டியாடியில் பாஜக வாக்குகளை இழந்தது. ஆனால், எல்டிஎப் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். நேமத்தின் கணக்கு பழைய விசயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியது. பாஜகவுக்கு 15,925 வாக்குகள் குறைந்தன. கிட்டத்தட்ட அதே அளவு வாக்குகளை யுடிஎப் பெற்றது. இதுபோன்று வாமனபுரத்திலும் பாஜக வாக்குகளை இழந்தது.இதுபோன்று பல இடங்களில், யுடிஎப்புக்கு சாதகமாக பாஜக வாக்குகளை மாற்றி அளித்த போதிலும் எல்டிஎப்வெற்றி பெற்றது. ஒரு அரசியல் கட்சியின் வாக்குகள் தங்கள் வேட்பாளருக்கு வழங்கப்படாமல், எல்டிஎப்-ஐ தோற்கடிப்பதற்காக பேரம் பேசப்பட்டுள்ளன. இதுபோன்று பல்வேறு இடங்களில், வாக்குகள் மாற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் எல்டிஎப் வென்றது. இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

                                ****************** 

பாஜக விற்ற 4.28 லட்சம் வாக்குகள்

2016 கேரள சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற ஓட்டுகள் 30,20,690. ஆனால் மொத்த வாக்காளர்கள் அதிகரித்துள்ள நிலையிலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 4,28,531 ஓட்டுகளை இழந்துள்ளது. தற்போது பாஜக பெற்றுள்ள ஓட்டு 25,92,139. பாஜகவுக்கு குறைந்துள்ள ஓட்டுகள் யுடிஎப்புக்கு விற்பனை செய்யப்பட்டவை. யுடிஎப் கடந்த தேர்தலைவிட 4 லட்சம் ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது. பாலக்காடு தவிர 13 மாவட்டங்களில் உள்ள 90 தொகுதிகளில் பாஜக ஓட்டுகளில் இத்தகைய குறைவு ஏற்பட்டுள்ளது.

;