states

img

உரிமை மறுப்பு: தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை

குஜராத்தில், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த 10 பேருக்கு வாழ்நாள் தடை விதித்து குஜராத் தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 18 மாதங்களில், தகவல் அறியும் சட்டத்தை அதிக முறை  பயன்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் இச்சட்டத்தை பயன்படுத்தியதாகவும் கூறி 10 பேருக்கு, அம்மாநில தகவல் ஆணையம் வாழ் தடை வித்துள்ளது. இது குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்த இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையர் வஜாத் ஹபிபுல்லா, குஜராத் தகவல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்குரியவை மட்டுமல்ல, முற்றிலும் சட்டவிரோதமானதும் கூட என்றும், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் உள்ள பெத்தாபூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை அமிதா மிஸ்ரா என்பவர் தனது சம்பள விவரங்களை கேட்டு தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி சில கேள்விகளை கேட்டுள்ளார். இதேபோல், மொடாசா நகரில் உள்ள கஸ்பாவைச் சேர்ந்த பள்ளி ஊழியரான சத்தார் மஜித் கலீஃபா, தனது நிறுவனம் தன் மீது எடுத்த நடவடிக்கைகளுக்காக தகவல் சட்டத்தில் பல முறை கேள்வி எழுப்பினார். மேலும் பாவ்நகரைச் சேர்ந்த சிந்தன் மக்வானா, தனது மனைவிக்கு வீட்டு ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை மாவட்ட சுகாதார அலுவலகத்திடம் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கேள்விகளை கேட்டுள்ளார். அதேபோல், தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி தங்கள் குடியிருப்பு பகுதி தொடர்பான தகவல்களை கேட்ட பெத்லாண்ட் பகுதியை சேர்ந்த ஹிதீஷ் பட்டேல் மற்றும் அவர் மனைவிக்கு வரலாற்றில் காண முடியாத வகையில், ரூ.5000 அபராதமும், தடையும் விதித்துள்ளது அம்மாநில தகவல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

;