states

img

நவீன அறிவியல் மருத்துவம் மீது அச்சத்தை ஏற்படுத்துவதா? ராம்தேவ் மீது 3 பிரிவுகளில் சத்தீஸ்கர் காவல்துறை வழக்கு....

ராய்ப்பூர்:
கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்து, தவறான தகவல்களைப் பரப்பியதாக ‘பதஞ்சலி’ நிறுவன முதலாளியும், சாமியாருமான ராம்தேவ் மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘‘நவீன அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது. இது தோல்வியடைந்த மருத்துவ முறை. அலோபதி மருந்துகளை உட்கொண்டு பலர் உயிரிழந்துவிட்டனர். ரெம்டெசிவிர் போன்ற இந்திய மருந்து கட்டுப்பாடு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் ஒன்று கூட வேலை செய்யவில்லை’’ என்று ராம்தேவ் கடந்த ஓராண்டாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வந்தார். இதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும்- ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரே தலையிட்டுப்பேசியும் ராம்தேவ் தனது அவதூறுகளை நிறுத்துவதாக இல்லை.இதனால் ராம்தேவ் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) தலைவர் ராகேஷ் குப்தா, இந்திய மருத்துவ சங்கத்தின் ராய்பூர் தலைவர் மற்றும் விகாஸ் அகர்வால் ஆகியோர் ராம்தேவ் மீது காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அதனைப் பெற்றுக்கொண்ட ராய்ப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஜய் யாதவ், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) சத்தீஸ்கர் பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், சட்டப் பிரிவுகள் 188 (அரசால் முறையாக அறிவிக்கப்பட்ட சட்டத்தை களங்கப்படுத்துதல்),  269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவும் வாய்ப்பை ஏற்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ராம்கிருஷ்ணா யாதவ் என்ற பாபா ராம்தேவ்மீது புதன்கிழமை இரவு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

;