states

img

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு-ஹரியானா எல்லையில் பதற்றம்

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லிக்கு செல்வோம்(தில்லி சலோ) போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கியுள்ளனர்.விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் விவசாயிகள் ஒன்றாக அணிதிரண்டு தில்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கடுமையாக ஒடுக்கியது. இதில் 750 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு அடிபணிந்து வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற்றது.

இதனையடுத்து, தற்போது விவசாயிகள் மீண்டும் தில்லி நோக்கி பேரணியை துவங்கியுள்ளனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி செல்வோம்(தில்லி சலோ) போராட்டத்தை பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து விவசாயிகள் நேற்று முன்தினம்(நவ.6) தொடங்கினர்.

தில்லி நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அறிவித்திருந்த நிலையில், விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மேலும், விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஷம்பு எல்லையைவிட்டு வெளியே நகர முடியாத வகையில் ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் பெரும் எண்ணிக்கையில் போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.