எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் அஞ்சும் மோடி அரசு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் வெளிநடப்பு
புதுதில்லி செவ்வாயன்று மாநிலங்களவை யில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பட்டியல் (எஸ்ஐஆர்) நடைமுறை குறித்து எதிர்க்கட்சி எம்.பி. க்கள், கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எஸ்ஐஆர் நடைமுறை ஒரு மோசடி ஆகும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட வாக்காளர்களை நீக்க இந்த நடைமுறை பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறினார். உடனே இடைமறித்த மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “இத்தகைய வார்த்தைகளை அனுமதிக்க முடியாது. தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் கடந்த கூட்டத் தொடரிலேயே முடிந்துவிட்டது. அப்போது அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச போதிய நேரம் வழங்கப்பட்டது. எனவே, இப்போது மீண்டும் இதைப் பற்றிப் பேசுவது முறையல்ல” என்று கூறினார். அவைத் தலைவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் (இந்தியா கூட்டணி) அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பியும், கையில் பதாகைகளை ஏந்தியும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உடனே அவைத் தலைவர், “அவைக்குள் பதாகைகளைக் காண்பிக்க அனுமதியில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவையின் தலைவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கிளப்புவது சரியாக இருக்காது” என்று சி.பி. ராதா கிருஷ்ணன் கூறினார். அவைத் தலைவ ரின் விளக்கத்தால் அதிருப்தி அடைந்த இந்தியா கூட்டணி எம்.பி.,க்கள் மாநிலங் களவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். திங்களன்று மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர் குறித்து விவாதிக்க மறுத்த மோடி அரசு, செவ்வாயன்று எஸ்ஐஆர் குறித்த விவாதத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது.
