states

img

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பதே என் வேலை!

தில்லி பேரணியில் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி பேச்சு

புதுதில்லி, ஆக. 5 - ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பதே எனது வேலை; அதனைத் தொடர்ந்து செய்வேன்; மோடியின் சர்வாதிகாரத்திற்கு ஒருபோதும் அஞ்ச மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். விலைவாசி உயர்வுக்கு எதிராக வெள்ளியன்று தில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு முன்னதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. ஆனால், இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி நிதியமைச்சருக்கு எந்த புரிதலும் இல்லை, பூஜ்ஜிய புரிதல்கூட இல்லை. நிதிஅமைச்சர் பேசும் மேக்ரோ எகனாமிக் அடிப்படைகள் வேறு ஏதோ என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ஊதுகுழல் மட்டுமே. மக்கள் படும் இன்னல்கள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. 

விலைவாசி உயர்வு மற்றும் முக்கிய பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இந்த அரசு ஒருபோதும் தயாராக இல்லை. ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விட்டது. நூற்றாண்டுக்கு முன்பு இந்தியா ஒவ்வொரு செங்கல் செங்கல்லாக வைத்து நல்ல முறையில் கட்டமைக்கப்பட்டது. அவை அனைத்தையும் இன்று உங்கள் கண் முன்னால் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் (நாட்டு மக்கள்) அனைவருக்கும் இது நன்றாக தெரியும். ஜனநாயகம் அழிக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் அதை எதிர்த்தால் நசுக்கப்படுகிறார்கள். எதிர்ப்பவர்கள் யார்? என்பது பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர். அவர் ஆணா, பெண்ணா? எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை எல்லாம் பார்ப்பது இல்லை. அடித்து சிறையில் தள்ளுகிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் யாரும் மக்கள் பிரச்சனையைப் பற்றி பேசக்கூடாது என்பதுதான். மக்கள் நலனை பற்றி சிந்திப்பது இல்லை. சமுதாயத்தில் நடக்கும் வன்முறைகள், விலைவாசி உயர்வு போன்றவை பற்றி யாரும் பேசக்கூடாது என்றுதான் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறார்கள்.

இந்தியாவில் ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. 2, 3 பணக்காரர்களுக்காக மட்டுமே இந்த சர்வாதிகார ஆட்சி நடத்தப்படுகிறது. இந்த சர்வாதிகார ஆட்சியை எதிர்ப்பவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஹிட்லரும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார், அவரும் தேர்தல்களில் வெற்றி பெற்றார். அதை எப்படி செய்தார்? ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அனைத்து பொருட்களின் விலையும் ஜி.எஸ்.டி. வரியால் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இதற்கு பிரதமர் பதில் சொல்லியே தீர வேண்டும். சர்வாதிகார ஆட்சியால் நான் பயந்து போய் விட மாட்டேன். எனக்கு பயம் என்பதே கிடையாது. என்னைக் குறிவைத்து தாக்குகிறார்கள். இதை நான் மகிழ்ச்சியாகத்தான் கருதுகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை, அதைச் செய்யப் போகிறேன். நான் எவ்வளவு அதிகமாகச் செய்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் தாக்கப்படுவேன், நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். அதற்காக நான் வருத்தப்படப் போவது இல்லை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னை தாக்குங்கள்...

காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்..? என் குடும்பம் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது. இந்த சித்தாந்தத்திற்காக நாங்கள் போராடுவது  எங்கள் பொறுப்பு. இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒருவரையொருவர் மோதிக்கொள்ளும் போதும், தலித்துகள் கொல்லப்படும்போதும், ஒரு பெண் தாக்கப்படும்போதும் நமக்கு வலிக்கிறது. எனவே, நாங்கள் போராடுகிறோம். இது ஒரு குடும்பம் மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தம். இதற்காக காந்தி குடும்பத்தை தாக்குகிறார்கள்? நாங்கள் ஒரு சித்தாந்தத்திற்காக போராடுவதால் அவர்கள் அதை செய்கிறார்கள். எங்களைப் போன்றே கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஜனநாயகத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் போராடுகிறோம், இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். இது நான் மட்டும் அல்ல, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. உண்மையை சொன்னால் தாக்குவார்கள் என்றால் மீண்டும் மீண்டும் நான் உண்மையை சொல்லிக் கொண்டே இருப்பேன். ஒருபோதும் அதை நான் நிறுத்தமாட்டேன். போர் வரும்போது காயம் அடையும் வீரர்கள் அதை நினைத்து மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோல தான் நானும் என்மீது விசாரணை நோக்குகளை தூண்டிவிட்டாலும், மகிழ்ச்சிதான் அடைகிறேன்.  இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

;