states

உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் தேர்தல் எதிரொலி பிரதமரின் இலவச ரேசன் திட்டம் 2022 மார்ச் மாதம் வரை நீட்டிப்பு

புதுதில்லி, நவ. 25 - ஐந்து மாநில தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய அரசின் இலவச ரேசன் திட்டமான பிரதான் மந்திரி கரிப்  கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தை மேலும் நான்கு  மாதங்களுக்கு மார்ச் 2022 வரை நீட்டி க்க ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம் என முரண்டுபிடித்து வந்த மோடி அரசு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றுள்ளது. குறிப்பாக, உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள்  எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக முடிந்தால், அது 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற பயம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், விளை பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் கேட்கும் விவசாயிகள் கோரிக்கையை மோடி  அரசு இப்போதும் தவிர்த்தே வரு கிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லா மல் நழுவி ஓடுகிறது.

எனவேதான், மோடி அரசின் அறிவிப்பில் விவசாயிகள் திருப்தி அடையவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மத்தியச் சட்டம் ஒன்றை நிறை வேற்றக்கோரி விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் அடுத்த முயற்சி யாக, 80 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதத்திற்கு ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை யை இலவசமாக வழங்கும் ‘பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாதத்தோடு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா  திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டோம். கொரோனா தாக்கத்திற்குப் பின் பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருகிறது. எனவே திட்டத்தை நீட்டிப்ப தற்கான அவசியம் ஏதுமில்லை என ஒன்றிய உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே கூறியிருந்தார்.

ஆனால், தற்போது இந்தத் திட்டத்தை 2022 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து ள்ளது. “பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருவதை நாங்கள் அறிந்துள் ளோம். ஆனால் பிரதமர் மோடி யோ, கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குடும்பங் களுக்கு உதவ விரும்புகிறார், அவர் விருப்பத்தின்படி அடுத்த நான்கு மாதங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளது” என ஒன்றிய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பல மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்தத் திட்டத்தை நீட்டிக்கவேண்டுமென வலியுறுத்திய போது முடியவே முடியாது எனக் கூறிய ஒன்றிய அரசு இப்போது  திட்டத்தை நீட்டித்துள்ளது. ஒன்றிய அரசின் உணவுத் துறை செயலர் சுதன்ஷு பாண்டே உத்தரப்பிரதேச தேர்தலை மட்டும் மனதில் கொண்டு முடிவு எடுக்கப்படவில்லை, என்று கூறி, ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று அவராகவே உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த நீட்டிப்பு உத்தரவால், டிசம்பர் 2021- முதல் மார்ச் 2022-ஆம் வரை வரையிலான காலத்தில், 163 லட்சம் டன் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக ரூ. 53 ஆயிரத்து 345 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் உணவு தானிய கையிருப்பு தற்போது   616 லட்சம் டன்னாக உள்ளது.  ராபி  சீசன் கொள்முதலைத் தொடர்ந்து ஜூன் 2022-க்குள் இது 942 லட்சம் டன்னாக உயரும் என்று உணவுத்துறை செயலாளர் பாண்டே கூறுகிறார். அவர் கூறுவதன்படி, இந்திய உணவுக் கழகத்தில் போதுமான அளவு உணவு தானியம் இருப்பதால் இந்தத் திட்டத்தை, 2022 மே வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

;