science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 )  இயற்கையின் ஜொலிப்பு 

நாம் பயன்படுத்தும் பொருட்களில் பளபளப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்கள், நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் அல்லது மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஒரு புதிய, நச்சற்ற, மக்கும்தன்மை கொண்ட மாற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்  பெயிண்ட்,ஒப்பனை பொருட்கள், சிப்பங்கள் ஆகியவற்றில் சுற்றுசூழலுக்கு உகந்த பளபளப்பான பலவண்ண நிறமிகள் பயன்படுத்தலாம். ஆப்பிரிக்காவிலுள்ள பெரி வகைத் தாவரம் ஒன்று ஊதா நிறத்தில் பிரகாசமான பழங்களை காய்க்கின்றது. அக்கனிகளின் மேலுள்ள செல்லுலோஸ் நார்கள் நுண்ணிய வடிவமைப்புகளில் உள்ளன. அவை சில குறிப்பிட்ட அலைநீள ஒளிக்கதிர்களை பிரதிபலிப்பதால் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. இதை முன்மாதிரியாகக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியியலாளர் சில்வியா விஞ்னோலினியும் அவரது குழுவினரும் செல்லுலோஸ் நார்களை மெல்லிய படிவமாக்கி சுழல் ஏணி வடிவில் உறைய வைத்தனர். இதன் அமைப்பை நமக்கு ஏற்ற வடிவில் மாற்றி குறிப்பிட்ட அலை நீள ஒளிக்கதிர்களை பிரதிபலிக்க செய்யலாம். அதன் மூலம் வேண்டிய வண்ணங்களையும் பெறலாம்.      

மரக்கூழ், பழத் தோல்கள், பருத்தி இழைகள் போன்ற எந்த செல்லுலோஸ் இழைகளையும் பயன்படுத்தலாம். இந்தப் புதிய நிறமியின் சுற்று சூழல் தாக்கம் சோதிக்கப்பட வேண்டும். ஆனால் இயற்கை மூலகங்களைக் கொண்டு தயாரிக்கபப்டும் பொருட்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று இந்த ஆய்வாளர் நம்புகிறார். 

2 )  நிலவு சிவப்பதேன்?

ஐநூறு ஆண்டுகளில் மிக நீண்ட ‘பகுதி நிலவு மறைப்பு’ (partial lunar eclipse) நவம்பர் மாதம் 19ஆம் தேதி நிகழ்ந்தது என்கிறது நாசா. இது இந்திய நேரப்படி மதியம் 12.48 மணி முதல் மாலை 4.17 மணி வரை அதாவது  3மணி நேரம் 28 நொடிகள்  24 வினாடிகள் நிகழ்ந்ததாம். உலகெங்கும் இதைப் படம் பிடித்து இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளனவாம்.  நிலவு மறைப்பு குறித்து இன்னொரு தகவலையும் நாசா தெரிவிக்கிறது. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வருவதால் இது நிகழ்கிறது என்பதை நாம் அறிவோம். அதனால் பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. அந்த நேரத்தில் நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறது. ‘ராலே சிதறல்’ என்கிற கோட்பாட்டின்படி சூரியனிலிருந்து வரும் கதிர்களில் நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு நிறம் மட்டும் பூமியின் வளிமண்டலத்தை தாண்டி நிலவில் விழுகிறது. இந்த நேரத்தில் ‘ராலே சிதறலுக்கும்’ ‘ராமன் விளைவுக்கும்’ ஒப்பிட்டுப் பார்க்கலாம். ராலே சிதறலில் ஒரு ஊடகத்தின் வழியே வரும் ஒளிக்கதிர்கள் அலைநீளம் மாறாமல் ஊடகத்திலுள்ள துகள்களால்  சிதறடிக்கப்படிகிறது. ராமன் விளைவில் அலைநீளம் மாற்றப்படுகிறது.  

3 ) களிமண்ணும் புவிவெப்பமயமும் 

வெப்ப நிலை அதிகரிப்பதால் பூமிக்கடியில் சேமிக்கப்படும் கார்பன் அளவு குறைந்து புவி வெப்பமடைவது அதிகரிக்கிறது.உலகெங்கும் உள்ள 9000  மண் மாதிரிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது. மண்ணிலிருந்து வெளிவிடப்படும் கார்பனின் அளவு மண்ணின் தன்மையைப் பொறுத்தும் உள்ளது என்று இந்த ஆய்வின் மூலம் அறியபப்ட்டுள்ளது. களிப்பு குறைவாக உள்ள மண் களிப்பு  அதிகமாக உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகம் கார்பனை வெளிவிடுகிறதாம்.  

4 ) தேம்ஸ் நதி உயிர் பெற்றது 

லண்டனிலுள்ள தேம்ஸ் நதி உயிரியல் ரீதியாக இறந்துபோன ஒன்றாக 1957ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது தேம்ஸ் நதியில் சுறாக்கள்,கடல் குதிரைகள்,சீல் ஆகியவை உள்ளதாக லண்டன் விலங்கியல் சங்கம் ஒரு ஆய்வில் கண்டுள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு முயற்சிகளின்  தாக்கத்தை அது வலியுறுத்துவதோடு ஒட்டுமொத்த சித்திரம் இயற்கைக்கு பிரகசமாக  உள்ளது என்றும் கூறுகிறது.. ஆனால் தேம்ஸின் அலைஏற்ற  பகுதிகளில் காணப்படும் மீன் இனங்களின் எண்ணிக்கை சிறிது குறைந்துள்ளதாம். 

5 ) ஹோமொசெப்பியனுக்கு பதிலாக ஹோமொசெப் 

சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு ‘ஹோமோ செப்‘(HomoSEP) எனும் ரோபோவை ஐஐடி சென்னையின் மெக்கானிக்கல் பொறியியல் துறையும் சிஎன்டிஇ எனும் மையமும் இணைந்து தயாரித்துள்ளன. ஒரு கம்பியில் குடை போல் விரியும் பிளேடுகள் இணைக்கப்பட்டிருப்பதால்  இந்தக் கருவி சிறிய திறப்புகளும் உள்பக்கம் அகன்றதாயும் உள்ள செப்டிக் டேங்குகளை எளிதாக சுத்தம் செய்யும். கெட்டி தட்டிப் போன மலக் கழிவுகளை உடைத்து வெளித்தள்ள வேகமாக சுழலும் இந்த பிளேடுகள் உதவுகின்றன.  இதை ஒரு டிராக்டரில் இணைத்து எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். டிராக்டரின் மின் ஆற்றலினால் இதை இயக்க முடியும்.இதை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆயிற்றாம்.இதை சோதித்துப் பார்ப்பதில்  துப்புரவுப் பணியாளர் சங்க உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்பட்டனராம். கெயில்,கேப் ஜெமினி, வின் அறக்கட்டளை, தேசியப் பங்குச் சந்தை ஆகிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி எனப்படும் சிஎஸ்ஆரின் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் இது பயன்படுத்தப்போகின்றனவாம்.

 

வண்ணக்கதிர் வரவேற்பறை

அன்பார்ந்த வாசகர்களே, வண்ணக்கதிர் பக்கங்களைச் செழுமைப் படுத்திடப் பலவகை ஆக்கங்களும் இணைய வேண்டுமல்லவா? உங்கள் கதை, கவிதை, கட்டுரை, தகவல் துணுக்கு, பயண அனுபவம், அறிவியல் பதிவுகள் உள்ளிட்டவை வரவேற்கப்படுகின்றன. உங்களின் படைப்புகளை தமிழ் யூனிகோட் எழுத்துருவில் அனுப்புங்கள். எழுத்தாக்கங்களை படப்பதிவு வடிவில் (பிடீஎஃப்) அல்லாமல், மின்னஞ்சல் பக்கத்தில் அல்லது வெர்ட்பேட் பக்கத்தில் தட்டச்சு செய்து அனுப்புங்கள். ஓவி யங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தட்டச்சு செய்யப்பட்ட பக்கத்திலேயே ‘பேஸ்ட்’ செய்யாமல், தனித்தனியாக இணைத்து அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
vannakkathir@gmail.com






 

;