science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) நாகரீகத்தில் தொழிலாளிகளின் எச்சம் 

      ஆஸ்திரியாவில் யுனேஸ்கோ தொல்லியியல் மையப்பகுதியில் அமைந்துள்ள உப்பளங்களிலிருந்து  எடுக்கப்பட்ட மனிதக் கழிவுகளை ஆய்வு செய்ததில், 2,700 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளிகள் ஊதா பாலாடையையும் பீரையும் உணவாகக் கொண்டனர் எனத் தெரிகிறது. பாலாடையும் பீரும் தயாரிக்கப் பயன்படும் இரண்டு பூஞ்சை வகைகள் இந்தக் கழிவில்  இருந்தன. ஐரோப்பிய உலோக காலத்தில் பாலாடைகள் புளிக்க வைக்கப்பட்டதற்கான முதல் ஆதாரங்கள் இவை என்று அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2 ) யானைத் தந்தங்களின் வேட்டையும் பரிணாம மாற்றமும்  

     யானைத் தந்தங்களை வேட்டையாடுபவர்களால் யானைகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை; இயற்கையாகவே தந்தங்கள் இல்லாமல் பிறக்கும்  யானைகளின் எண்ணிக்கையும்  அதிகமாகிறது. மொசாம்பிக் நாட்டில நடைபெற்ற ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 1977 ஆண்டிலிருந்து  1992ஆம் ஆண்டு வரை அந்தநாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில், உணவுக்காகவும்   தந்தத்திற்காகவும் ராணுவம் யானைகளையும் மற்ற காட்டு விலங்குகளையும் வேட்டையாடியது. இதனால் அந்த நாட்டின் கோரன்கோசா தேசியப் பூங்காவில் இருந்த  தாவர உண்ணிகள் 90 சதவீதம் குறைந்துவிட்டன. தந்தமில்லா பெண் யானைகளின் எண்ணிக்கை 18 சதவீதத்திலிருந்து  51 சதவீதமாக அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வேட்டையிலிருந்து தப்பிக்க, தந்தமில்லா இனமாக இருப்பதே சிறந்தது என்ற பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது. பற்களின் இரண்டு ஜீன்களில் ஏற்பட்ட பிறழ்வின் காரணமாக இது நடைபெற்றிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

3 ) பெட்ரோலுக்கு மாற்று எண்ணெய்

ஒருவகைக் கடுகுச்செடியிலிருந்து எடுக்கப்படும்  எண்ணெய், விமான எரிபொருளாகப் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தினால்  கார்பன் உமிழ்வு பெட்ரோலிய எரிபொருளைவிட 68 சதவீதம் குறைவாக உள்ளது. ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி புனீத் திவேதி மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் உணவுக்கு ஏற்றதல்லாத எண்ணெய் வித்துக்களிலிருந்து எடுக்கப்படும் எரிபொருளின் விலை ஒரு லிட்டருக்கு 0.12 டாலரிலிருந்து 1.28 டாலர் வரையே இருக்கும். இப்பொழுது தரப்படும் மானியங்களைக் கணக்கிட்டால் பெட்ரோலிய எரிபொருளின் விலை இதைவிட அதிகமே.   

4 ) உள்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் வந்த மாயம் 

உள்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் வந்த மாயம்  சதுப்பு நில தாவரங்கள் கடற்கரையை ஒட்டி உப்பு நீரிலேயே வளரக்கூடியவை. ஆனால் மெக்சிகோ நாட்டில் கடலிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சான் பெட்ரோ மார்ட்டிர்  நதிக்கரையில் சிவப்பு நிற சதுப்புநில தாவரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. உப்பு நீரில் வளரும் இவை எப்படி நன்னீரில் வளர்கின்றன? தன் தந்தையுடன்  நதியில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் கார்லஸ் புரேலோவின் மனதில் மற்ற மரங்களிலிருந்து வேறுபட்ட இந்த முறுக்கிய  வேர்கள் ஆழமாகப் பதிந்தன. வளர்ந்து உயிரியல் அறிஞர் ஆன பிறகு   அவர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை  வெளியிட்டுள்ளார். உயிரணு சோதனைகள், தாவரங்கள்  மற்றும் வண்டல் குறித்த ஆய்வுகள், கடல் மட்ட உயர்வு மாதிரிப்படுத்தல் ஆகியவை மூலம் இந்த தாவரங்கள் ஒரு இலட்சம் வருடங்கள் முன்பிருந்தே வாழும் ‘ரெலிக்ட் ஈக்கோ சிஸ்டம்’ (தனித்து பண்டைய அமைப்பு முறையில் வாழ்பவை) எனும் வகையை சேர்ந்தவை என்று காணப்பட்டுள்ளது. பனியுகத்தின் இடைக்காலத்தில் கடல் மட்டம் 9 மீட்டர் உயர்ந்து தற்போது யுகட்டன் என்றழைக்கப்படும் தீபகற்பத்தை மூழ்கடித்தது. இதன் விளைவாக சதுப்பு நிலத் தாவரங்கள் இடப் பெயர்ச்சி அடைந்தன. புவி மீண்டும் குளிர்ந்து கடல் மட்டம் தாழ்ந்தபோது இத்தாவரங்கள் கடலிலிருந்து தொலைவில் விடப்பட்டன. சாதாரணமாக உப்பு நீரில் வளரும் இவைகள் நிலத்தில் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்திருப்பது ஆச்சரியமானது என்கிறார்  இல்லினாய்ஸ் பல்கலைக்கழக உயிரியிலாளர் ஹாலி ஜோன்ஸ்.   

5 ) பார்வைக் குறைபாடுக்கு புதிய ஜீன் சிகிச்சை 

   விழித்திரையில் ஒளி உணரும் நரம்புகள் சிதைவதால்  ரெடினிட்டிஸ் பிக்மென்ட்டோசா எனும் கண்பார்வைக் கோளாறு உண்டாகிறது. இவர்கள் முற்றிலும் பார்வையை இழக்கிறார்கள். இப்போது புதிய வகை  ஜீன் தெரபி  மூலம் இதை ஓரளவுக்கு சரி செய்ய முடிகிறது. இதற்கு முன் சிறப்பு கண்ணாடிகள் மூலம் ஒளிக்கற்றைகள் விழித்திரையில் பாய்ச்சப்படும் முறையில்  நோயாளியால் வெளிச்சத்தை உணர முடியும். ஆனால் அசைவை காண  இயலாது. அதேபோல் பொருட்களை எடுக்கவும் இயலாது. இப்போது சிறப்புக் கண்ணாடிகள் மற்றும் ஜீன் தெரபி மூலம் அவரால் பொருட்களைப் பார்க்கவும் எண்ணவும் முடிவதோடு சாலையைக் கடக்கும் வெள்ளைக் கோடுகளைக் கூட பார்க்க முடிகிறது.

6 )  போரும் சுனாமியும் 

    புவியின் காந்தப்புலத்தை அளவிடும் ஆய்வுகள் 1800களில் ஜெர்மன் புவியியலாளர் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் என்பவரால் தொடங்கப்பட்டது. ஜெர்மன் கணிதவியலாளர் கார்ல் பிரடரிக் காஸ் என்பவருடன் இணைந்து  1833இல்  காந்தப் புலத்தை அளவிடும் கருவியான மேகனடோ மீட்டரை வடிவமைத்தார். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவிற்கு எதிரி நாட்டு நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதற்காக இன்னும் துல்லியமான கருவிகள் தேவைப்பட்டன.  1936இல் அப்படிப்பட்ட கருவியை அறிவியலாளர்கள் வடிவமைத்தனர். அதற்கு ‘பிளக்ஸ்கேட் மேகனட்டோமீட்டர்’ எனப் பெயரிடப்பட்டது. ஆனால் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய இவை ஊர்திகளில் எடுத்து செல்லும் வகையில் அமைய வேண்டும்.   பிட்ஸ்பர்க் நகரில் கல்ஃப் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ரசிய விஞ்ஞானி விக்டர் வாக்கயர் அத்தகைய காந்தக் கருவியை  1941இல் வெற்றிகரமாக வடிவமைத்ததார்.    அமெரிக்க கப்பற்படை நிதியுதவியுடன்  விமானங்களில் பொருத்தப்பட்ட பிளக்ஸ்கேட் மேகனட்டோமீட்டர், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட உதவின. போர் முடிந்ததும் விஞ்ஞானிகள் இந்தக் கருவியைக் கொண்டு கடலின் அடித்தளத்தின்  காந்தப்புலத்தை வரைபடமாக்கி  ஆராயத் தொடங்கினர். கடலில் அடித்தளத்திலுள்ள குன்றுகளின் காந்தப் புலம் பூமியின் மேல்பரப்பிலிருக்கும் பாறைக் குன்றுகள் வெளிப்படுத்தும் காந்தப் புலத்திற்கு மாறுபட்டதாக இருந்தது.  இரு புறமும் சமச்சீராக இருக்கும் இப்படங்கள் ‘மேஜிக் புரபைல்’ என அழைக்கப்படுகிறது.  பூமியின் மைய அச்சு, கடலின் நடுப் பகுதியிலுள்ள குன்றுகளை இருபக்கமும் இழுக்கிறது என்கிற கருதுகோள் இதன் மூலம் நிரூபணமாகியது. கடல் தட்டுகள் அல்லது கண்ட தட்டுகள் நகருவதால் சுனாமி ஏற்படுகிறது போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாம் இதன் பின்னர் தெரிய வந்தது.
 



 

 

 

;