science

img

வண்ணக்கதிர்- அறிவியல் கதிர்

1) கண்ணீரில் என்ன உண்டு?
கண்ணீர் நம் உடலினுள்ளே இருக்கும் நோய்கள் குறித்து தெரிவிக்கின்றன என்கிறார் சீனாவிலுள்ள வென்சூ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் மருத்துவப் பொறியாளர் ஃபெய் லியூ. கண்ணீர் துளிகளிலிருந்து கண் நோய்களை கண்டறியலாம். நீரிழிவு நோய்கள் குறித்த அறிகுறிகளைக் கூட காணலாம்.    உமிழ்நீர்,சிறுநீர் ஆகியவற்றில் இருப்பதைப்போல கண்ணீரிலும் செல் குறித்த தகவல்கள் அடங்கிய மிகச் சிறிய பைகள் உள்ளன.இவற்றிலுள்ள தகவல்களை அறிய முடிந்தால் உடலினுள்ளே நடைபெறும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் உடலிலிருந்து பரிசோதனைக்காக எடுக்கப்படும் மற்ற திரவங்களை போல் அல்லாமல் கண்ணீர் சில துளிகள் மட்டுமே சுரக்கின்றன.இவற்றிலிருந்து தகவல் பைகளை பிரிப்பதற்கு லியூ குழுவினர் புதிய முறையை வடிவமைத்தனர். அதை ஆய்வு செய்தபோது கண் வறட்சிநோய்களின் அறிகுறியை இந்தப் பைகள் காட்டுகின்றன என்று தெரிந்தது. மேலும் சர்க்கரை நோய் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதையும் கண்காணிக்க உதவ முடியும். இப்போது அறிவியலாளர்கள் மற்ற நோய்கள், மன அழுத்தம் போன்றவற்றிற்கும் கண்ணீரில் தடயங்களைக் காண்பதற்கு முயற்சி செய்கின்றனர். கண்ணீர் என்ன தெரிவிக்கிறது என்பதை இது வரை நாம் சரியாக ஆய்வு செய்யவில்லை என்கிறார் இதன் இணை ஆய்வாளர் லுயூக்

2) குளவியின் பெயரில் இனவாதம்?
கனடாவிலும் அதை ஒட்டிய அமெரிக்க பகுதிகளிலும் காணப்படும் மலைக்குளவி, தேனீக்களின் கூடுகளின் மீது படையெடுத்து அவற்றின் லார்வாக்களை உணவாக்கிக் கொள்கின்றனவாம். இவை நமது கட்டை விரல் அளவு பருமனாக உள்ளன.இந்த வகை குளவிகள் ‘கொலைகாரக் குளவி’அல்லது ‘ஆசிய குளவி’ என்று அழைக்கப்பட்டன. ஆசியாவில் பல்வேறு வகை குளவிகள் வசிக்கின்றன.எனவே இவற்றை ‘ஆசிய குளவி என்றழைப்பது சரியில்லை. மேலும் ஆசியக் குளவி’ என்பது இனவாதமாக தொனிப்பதாலும் அதன் பெயரை மாற்ற அமெரிக்க கழகம் முடிவு செய்துள்ளது. இதை வடக்கு ராட்சச குளவி’என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3) எய்ட்ஸ் நோய்க்கு ஸ்டெம் செல் சிகிச்சை
ரத்த புற்று நோயாளி  நோயாளி ஒருவருக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் நீண்ட காலம் பிழைத்திருப்பதுடன் இவருக்கு இருந்த ஹெச்ஐவி நோயும் குணமாகிவிட்டதாம்.இவருக்கு ஸ்டெம் செல் கொடை அளித்தவர் எய்ட்ஸ் நோய் கிருமி எதிர்ப்பு சக்தி உள்ளவர் என்பதை தேர்ந்தெடுத்து  செய்துள்ளனர்.66 வயதாகும் இவருக்கு அமெரிக்க கலிபோர்னியா மருத்துவ மனையில் 1988ஆம் ஆண்டு ரத்த புற்று நோய் கண்டறியப்பட்டது.

4) அந்துப் பூச்சிகளும் மகரந்த சேர்க்கையும்
ரெட் கிளாவர் எனும் தீவனப் புற்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுவது தேனீக்கள்  மட்டுமே என்று கருதப்பட்டு வந்தது.இப்போது நடந்துள்ள ஒரு ஆய்வில் அந்துப் பூச்சிகளும் இரவில் இந்த  தாவரத்தை அடைந்து மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அலிசன் மற்றும் அவரது குழுவினர் 2021ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஆல்ப்ஸ் மலை பகுதியில் கேமிராக்களை பொருத்தி தாவரங்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தனர் குறிப்பாக கால்நடைகளுக்கு  உணவாகும் புற்களின் மலர்களை கண்காணித்தனர்.இந்த ஏற்பாட்டினால் இரவிலும் அவற்றை கண்காணிக்க முடிந்தது.மொத்தம் எடுக்கப்பட்ட 164000 புகைப்படங்களில் 44 படங்கள் பூச்சிகள்  வருகையை காட்டின. அவற்றில் 61% வண்டுகளும் 34%அந்துப் பூச்சிகளும் பதிவாகியிருந்தன.  இரவு நேர அந்துப் பூச்சிகள் மூலம்  விதைகள் உற்பத்தி கூடியிருப்பதும் தெரியவந்தது. மற்ற தாவரங்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுவது அந்துப் பூச்சிகளின் வழக்கமான ஒன்றுதான்.ஆனால் ரெட் கிளாவர் செடிகளில் அவற்றின் பங்கு கவனிக்கப்படவில்லை.இந்த ஆய்வை மற்ற பகுதிக ளிலும் செய்ய உள்ளனராம்.அதோடு கேமிராவில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பொருத்தி பூக்களுக்கு வரும் பூச்சிகளை விரைவாக வகைப்படுத்தவும் உள்ளனராம்.

5) நிலவில் நிழல் பகுதிகள்
நிலவின் மேற்பரப்பு, பகலில் 127டிகிரி சி வரை வெப்பமாகவும்  இரவில் மைனஸ் 173 டிகிரி சி வரை  குளிராகவும் மாறக்கூடியது. இதற்கு மாறாக சில நிழல் பகுதிகளில் உள்ள பள்ளங்களும் குகைகளும் 17டிகிரி சி வெப்பம் கொண்டவையாக உள்ளதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை நிலையான வெப்பத்தைக் கொண்டிருப்பதால் ஆய்வுக்கு ஏற்றதாக உள்ளனவாம்.எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி ஆய்வு செய்யலாம்.

6) சிலந்தியின் ரோபோ கால்கள்
அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறந்த சிலந்திப் பூச்சியின் கால்களைக் கொண்டு இயந்திர மனிதனின் பற்றும் நகங்களாக மாற்றியுள்ளனர்.சிலந்திகள் நீரியல் அழுத்தத்தின் மூலம் தங்கள் கால்களை நீட்டும் திறன் கொண்டவை.ஆனால் அவை இறந்தவுடன் இந்த திறன் மறைந்து விடுகிறது.ஆய்வாளர்கள் இறந்த சிலந்திப் பூச்சியின் உடலில் ஒரு ஊசியை இணைத்து அதன்மூலம் நுட்பமான அளவில் காற்றை செலுத்தி அதை ‘நெக்ரோபோடிக்’ பற்றும் கருவியாக மாற்றினர் .நெக்ரோபோடிக் பற்றும் கருவி ஒழுங்கற்ற வடிவ பொருட்களை பற்றும் திறன் கொண்டவை.இவற்றால்  தங்கள் எடையைப் போல 130% எடையை பற்ற  முடியும். மக்கும் தன்மை இதன் இன்னொரு சிறப்பு.

;