science

img

கடந்த 50 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் 2 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்- ஐ.நா 

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகளினால் உருவான பேரழிவுகள் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா நிறுவனம் . அதன்படி , கடந்த 50 ஆண்டுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் , 3.64 டிரில்லியன் டாலர் செலவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

உலக வானிலை அமைப்பின்(WMO) "அட்லஸ்" , வானிலை மாற்றம், நீர் மற்றும்  தட்பவெப்ப நிலையினால் உருவான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளைப் பற்றி மிக விரிவான ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

இந்த "அட்லஸ்" , 1970-2019 ஆண்டுகளுக்குள் உலகில் நடந்த 11,000 இயற்கை சீற்றங்களை ஆய்வு செய்துள்ளது . அதன்படி,1983 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் கடும் வறட்சியினால் ஏற்பட்ட 3,00,000 அளவிலான உயிரிழப்புகளையும், 2005 ஆம் ஆண்டு  கத்ரீனா சூறாவளியால் ஏற்பட்ட 163.61 பில்லியன் டாலர் இழப்புகளையும் கூட துல்லியமாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. 

தற்போது நடத்திய ஆய்வில்,1970இல் இருந்து 2019க்குள் பேரழிவுகளின் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளதாக அட்லஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் , புவி வெப்பமடைதல் காரணமாகத் தீவிர வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதற்கான அறிகுறிகளையும் சேகரித்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் , காலநிலை மாற்றத்தால் , 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் , 3.64 டிரில்லியன் டாலர் செலவாகியிருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா நிறுவனம் . மேலும், இந்த 2 மில்லியன் இறப்புகளில், 91% க்கும் அதிகமானவை வளரும் நாடுகளில்  நிகழ்ந்துள்ளது என்ற அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலக வானிலை அமைப்பின் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில் , பாதி நாடுகள் மட்டுமே ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.  

 

;