மீன்களின் பெரும் வேட்டை
நார்வே கடற்கரைக்கு அருகில் பல்லாயிரக்கணக்கான கேப்லின்(capelin) வகை மீன்களை சில மணி நேரத்திற்குள் காட் (cad)மீன்கள் இரையாக விழுங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. கேப்லின் மீன்கள் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் பெரும் கூட்டமாக ஆர்டிக் வட்டத்திலிருந்து ஐரோப்பா நோக்கி இடம் பெயர்கின்றன. ஆற்றலை சேமிப்பதற்காகவும் வேகம் மற்றும் திசை ஆகியவற்றை ஒழுங்கமைப்பதற்காகவும் அவை பெரும் கூட்டமாக செல்கின்றன. ஆனால் அவ்வாறு பெரும் கூட்டமாக சேர்ந்ததே காட் மீன்களை ஈர்த்திருக்கும் என்கிறார்கள் மசாசூசெட்ஸ் மற்றும் நார்வே நாட்டு கடல் ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள். கேப்லின் மீன்கள் கோடிக்கணக்கில் இருப்பதால் இந்த அழிவு, அவற்றின் மொத்த தொகையில் வெறும் 0.2% தான். ஆனால் கூட்டமாக சேரும் மீன்களின எண்ணிக்கை குறைந்துவருவதால் இத்தகைய ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் இடம் பெயரும் மீன் இனங்களில் மதிப்பு மிக்க அட்லாண்டிக் சாலமன் உட்பட 97% அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒலியை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய ஆய்வுகள் அவற்றை அடையாளம் காண உதவும். காலநிலை மாற்றத்தாலும் மனித நடவடிக்கைகளாலும் உயிரினங்களின் வாழ்விடங்கள் குறைந்து வருவதால் இத்தகய பெரும் வேட்டை நிகழ்வுகள் இரையாகும் இனத்திற்கும் அவற்றை சார்ந்து இருக்கும் பல இனங்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் எம் ஐ டி கடல்சார் பொறியியலாளர் நிக்கோலஸ் மாக்ரிஸ். இந்த ஆய்வில் நீருக்கடியில் ஒலியை உணரக்கூடிய அகன்ற தூர பல்நிறமாலை எனும் புதுமையான தொழில்நுணுக்கம் (wide-area multispectral underwater-acoustic sensing) பயன்படுத்தப்பட்டதாம். காட் மீன்கள் பெரிய நீச்சல் பைகளைக் கொண்டவை. எனவே குறுகிய அதிர்வை உண்டாக்குகின்றன. கேப்லின் சிறிய பைகளைக் கொண்டவை. பெரிய அதிர்வை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட வேறுபட்ட ஒலிகளை இந்த தொழில் நுணுக்கத்தின் மூலம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கண்காணிக்க முடிந்ததாம்.
சிதையாத வேதிப்பொருட்களின் பாதிப்புகள்
என்றென்றும் நிலைத்திருக்கும் வேதிப்பொருட்கள்(Per- and polyfluoroalkyl substances -PFAS) என்று அழைக்கப்படக் கூடிய செயற்கை வேதிப்பொருட்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சிதையாமல் இருக்கக் கூடியவை. ஒட்டாத சமையல் பாத்திரங்கள், ஆடை பதப்படுத்துதல், அழகு சாதனங்கள் மற்றும் உணவு பொதிகள் ஆகியவற்றில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தோல், மூக்கு மற்றும் வாய் வழியாக இவை நம் உடலுக்குள் செல்லலாம். இவை 12000 வகையில் உள்ளது. அவற்றில் இரண்டு மட்டும் புற்று நோய், இதய நோய், கருத்தரிப்பு சிக்கல்கள் மற்றும் பிறவிக் குறைபாடுகள் ஆகியவற்றுடன் தொடர்பு உடையவை என தெளிவாக தெரிந்துள்ளது. மற்றவையின் பாதிப்புகள் அறியப்படவில்லை. லாஸ்ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் சிறுநீரகமும் குடல் நுண்ணுயிரிகளும் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்த ஹிஸ்பானிக் இன மக்கள் 78 பேரிடம் இச்சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் ஏழுவிதமான பிஎப்ஏ (PFA) வேதிப்பொருட்களின் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்கள். நான்கு வருட காலத்தில் அவர்களது சிறுநீரக செயல்பாடுகள் மோசமடைந்திருந்தன. நன்மை செய்யும் பேக்டீரியாக்களின் எண்ணிக்கையும் குறைந்திருந்தன. வீக்கத்தை குறைக்கும் வளர்சிதை மாற்றப் பொருட்களும் குறைவாகவே இருந்தன. 2000ஆம் ஆண்டிலேயே இந்த வேதிப் பொருட்கள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுவிட்டன. ஆனால் இன்னமும் இளம் வயதினரின் இரத்த ஓட்டத்தில் அவை காணப்படுகின்றன. இந்த சோதனை குறைந்த எண்ணிக்கை மக்களிடமே நடத்தப்பட்டிருந்தாலும் இவ்வகை வேதிப்பொருட்களினால் உறுப்புகள் எவ்வாறு சேதமடைகின்றன என்பதற்கு இது ஒரு மெய்ப்பு முன்கோள் (Proof of Concept) . இந்த ஆய்வு சயின்ஸ் ஆப் டோட்டல் என்விரான்மெண்ட் (Science of the Total Environment) என்கிற இதழில் வந்துள்ளது.
மரத்தினால் விண்கலம்!
உலகின் முதல் மரத்தால் ஆன செயற்கைக்கோளை ஜப்பான் விண்ணில் ஏவியுள்ளது. மங்கோலியாவை சேர்ந்த ஹனோக்கி எனும் மரம் ஜப்பானில் பாரம்பரியமாக வாள் உறைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது. அதை பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 10 மாதம் பரிசோதித்து விண்கலத்திற்கு ஏற்றது என இந்த ஆய்வாளர்கள் கண்டனர். இந்தக் கோள் முதலில் பன்னாட்டு விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பின் பூமியிலிருந்து 400கிமீ உயர சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்படும். மரத்தை நாமே உண்டாக்க முடியும் என்பதால் விண்வெளியில் வீடுகள் கட்டி வாழவும் பணி செய்யவும் இயலும் என்கிறார் கியோட்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளியாளர் டாக்கோ டோய். அவரது குழுவினர் நாசா சான்றிதழ் பெற்ற மர செயற்கைக்கோளை உண்டாக்கி மரம் விண்வெளியில் பயன்படும் பொருள் என்பதை நிரூபிக்க உள்ளனர். விண்வெளியில் ஆக்சிஜன் இல்லாததால், மரம் பூமியில் இருப்பதைவிட உளுத்துப் போகாமலும் தீப்பற்றாமலும் நீடித்து இருக்கும். ஆயுட்காலம் முடிந்தபின் செயற்கைக்கோள்கள் விண்குப்பைகள் ஆகாமல் பூமிக்கு திரும்ப வேண்டும். உலோகத்தால் ஆன செயற்கைக்கோள்கள் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது அலுமினியம் ஆக்சைட் உண்டாகி மாசு ஏற்படுகிறது. ஆனால் மரத்தால் செய்யப்பட்ட கலம் எரிந்துபோய் விடும். அதனால் குறைவான மாசே ஏற்படும்.