polling-station

திருப்பூர் சாய ஆலை கழிவுத் தொட்டியில் விஷவாயு தாக்கி அசாம் தொழிலாளர் 4 பேர் பலி

திருப்பூர், ஏப். 14 –திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சாய சலவை ஆலையில் சேகரமாகும் கழிவு நீரை அடைத்து வைத்திருந்த தொட்டியை சுத்தம் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன்படி ஞாயிறன்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பருக்அகமது (21) என்பவர் உள்ளே இறங்கினார். உடனடியாக அவர் மயங்கி விழுந்தார். விஷவாயு தாக்கியதை அறியாமல், இவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் ஒருவர் பின் ஒருவராக அன்வர்உசேன் (23), அபு (20), தில்வார் உசேன் (22) ஆகியோர் உள்ளே இறங்கினர். இந்நிலையில் அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உள்ளே விழுந்தவர்களை மேலே தூக்கிய நிலையில் மூவர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்ததில்வார் உசேனை திருப்பூர் மாவட்ட அரசுதலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனை யடுத்து நால்வர் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், ரசாயன கழிவுகள் சேகரமாகும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைப்படுத்தியது தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சாய சலவை ஆலை உரிமையாளர் மீதுவழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியில் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவல்லி கூறினார்.