politics

img

"தலிபானிய பாணியில் தாக்க வேண்டும்" - பாஜக சட்டமன்ற உறுப்பினரின் திமிர் பேச்சு !

அகர்தலா : திரிபுரா மாநிலம் அகர்தலாவில் கடந்த புதனன்று , ஒன்றிய அமைச்சர் பிரதிமா பாவ்மிக்கிற்கு பாராட்டு விழா நடந்தது. இதில் உரையாற்றிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் பாவ்மிக், திரிபுராவுக்குள் நுழையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைத் திரிபுரா விமான நிலையத்திலேயே வைத்து "தலிபானிய பாணியில் தாக்க வேண்டும்" என்ற திமிரான கருத்தினை கூறினார். இதற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

அருண் சந்திரா போவ்மிக்  2018 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் , பல ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அப்பொழுது  பல முறை  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுள்ளார். அதன் பின்னர் , பாஜக கட்சிக்கு மாறிய அவர், 2018 ஆம் ஆண்டு , சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பெலோனியா தொகுதியில் போட்டியிட்டு ,சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே திரிபுராவில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிலைகளை இடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

தலிபான்களின் பாணியில் தாக்குதல் 

இந்நிலையில் , கடந்த புதன்கிழமை அன்று ஒன்றிய அமைச்சர் பிரதிமா பாவ்மிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது . அதில்  அருண் பாவ்மிக் உரையாற்றினார். அப்போது , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைத் திரிபுரா விமான நிலையத்திலேயே மறித்து "தலிபான்களின் பாணியில் தாக்குதல் நடத்த வேண்டும்" என்று கூறினார். மேலும் , திரிபுராவை ஆட்சி செய்யும் பாஜக முதலமைச்சரான பிப்லப் குமார் தேவ்- ன் அரசாங்கத்தை தங்கள் ஒவ்வொரு சொட்டு ரத்தத்துடனும் பாதுகாக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

 

திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு 

 அனைத்து நாடுகளும் தலிபான்களை எதிர்த்துப் பேசி வரும் வேளையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான அருண் சந்திரா பாவ்மிக் , தலிபான்களை எடுத்துக்காட்டாக வைத்துப் பேசுவது பாஜகவின் பாசிச கோட்பாடுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும் , அவரை உடனடியாக  கைது செய்யுமாறும்  திரிணாமுல் காங்கிரஸ்  கோரிக்கை விடுத்துள்ளது. 

 

வன்முறையின் உச்சத்தில் பாஜக 

இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசிய சிபிஎம் மூத்த தலைவரான எம்எல்ஏ பேடல் சௌத்ரி , இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் . இதைப்பற்றிப் பேசிய அவர் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் , திரிபுரா அரசு , மிக வெளிப்படையாகவே பாஜகவிற்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்களை மிரட்டியுள்ளார் ,ஆனால் அன்று அதைப் பொருட்படுத்தாமல் விட்டதால் இன்று வரை பாஜக அரசு , பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்று கூறினார். 

அதேபோல் , தற்போது அருண் பாவ்மிக் பேசுவதையும் பொருட்படுத்தாமல் விடுவது ஆபத்தானது என்றும் அவர் கூறினார். 

மேலும் , கடந்த வாரம் பாஜகவின் துணைச் சபாநாயகர் பிஸ்வாபந்து சென் ,பாஜக அரசின் கட்டுப்பாட்டிற்கு இணங்காத அரசு ஊழியர்களின் "எலும்புகள் முறிக்கப்படும்" என்று கூறியதை போல , தற்போது அருண் பாவ்மிக் கூறியது பாஜக அரசின் வன்மத்தை விவரிக்கிறது என்றும் அவர் கூறினார்.  

 

 

;