politics

img

கோடநாடு விவகாரம் : இபிஎஸ் , ஓபிஎஸ் மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு 

சென்னை : கோடநாடு கொலை , கொள்ளை வழக்கில் இபிஎஸ் , ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி புதிய மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது . இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் 2017 ஏப்.23-ல் ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது . பின்னர் , பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது .

இந்த வழக்கில் சயான் , வாளையாறு மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீஸார் கைது செய்தனர். எனினும் , இந்த வழக்கு முடிவுக்கு வராமல் நிலுவையிலிருந்தது . 

இந்நிலையில் , தற்போது தமிழகத்தில் மீண்டும் இந்த விவகாரம் சுடுபிடித்திருக்கிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு , சதீசன் , சந்தோஷ் , சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் , கோடநாடு கொலை , கொள்ளை வழக்கில் இபிஎஸ் , ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமடைந்திருக்கும் அதிமுகவை சேர்ந்த எடப்படி பழனிச்சாமி உள்ளிட்டோர் இந்தவழக்கை மீண்டும் தோண்டுவது உள்நோக்கம் கொண்டது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறி வருகின்றனர். மேலும் அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமியை மனரீதியாக சோர்வடைய செய்யவே இந்த விஷயத்தை அரசு கையில் எடுக்கிறது என கூறினார். இதற்கிடையில் பலரும் மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் நீதிமன்றத்தில் இந்த மனுமீதான விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக செல்வபெருந்தகை எம்எல்ஏ, கொடநாடு கொலை வழக்கு சம்மந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறார். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

;