politics

img

மேற்குவங்கம்.... தவறான பாதையில் செல்கிறது சிபிஐ(எம்எல்)....

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர், திபங்கர் பட்டாச்சார்யா, சமீப காலமாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் சம்பந்தமாக இடது முன்னணி பின்பற்றியுள்ள உத்திகள் குறித்து, தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் பாஜக-வையும், திரிணாமுல் காங்கிரசையும் சரிசமமாக கருதுவதாகவும், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டையும் சேர்த்தே எதிர்த்திட வேண்டும் என்று கூறியிருப்பதையும்,  விமர்சித்து வருகிறார்.

அவர், மார்ச் 8 தேதியிட்ட தி இந்து நாளிதழில் அளித்துள்ள நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியால் எடுக்கப்பட்டுள்ள அரசியல் நிலைப்பாடு, “குறுகிய கண்ணோட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலைப்பாதை” (“narrow, short-sighted,  suicidal) என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், “இடது முன்னணியானது திரிணாமுல் காங்கிரசையும் மமதா பானர்ஜியையும் குறிவைத்துள்ள அதே சமயத்தில், பாஜகவைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறது,” என்றும் கூறியிருக்கிறார். எனவேதான் இத்தகைய “பிழையான” (“erroneous”) நிலைப்பாட்டிற்கு எதிராக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணியிலிருந்து விலகிக் கொள்ளவும், தனியே தேர்தலைச் சந்திப்பது என்றும் தீர்மானித்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) 12 இடங்களில் போட்டியிடுகிறது. அநேகமாக சுமார் 12 முதல் 15 இடங்களில் இடது முன்னணியை ஆதரிக்கிறது. மீதியுள்ள இடங்களில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காகப் பிரச்சாரம் செய்ய இருக்கிறது. இதன் பொருள், சுமார் 200க்கும் அதிகமான இடங்களில் அது திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கிறது.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கூறுவது சரியானதல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் பாஜகவையும் திரிணாமுல் காங்கிரசையும் சரி சமமாகப் பாவித்திடவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜகவினால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலையும் குறைத்து மதிப்பிட்டுவிடவில்லை. இந்துத்துவா சக்திகள் மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் வெறித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அது எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதையும், அது ஏற்படுத்தியுள்ள ஆபத்தின் அளவையும் காட்டியிருக்கிறது. எனினும், இத்தகைய பாஜகவின் “பாசிஸ்ட் தாக்குதலை” முறியடிப்பதற்காக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) பொதுச் செயலாளர் கூறியிருப்பதுபோன்று திரிணாமுல் காங்கிரசுடனும், அதன் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியுடனும், கைகோர்த்திட வேண்டும் என்று எந்த விதத்திலும் பரிசீலனை செய்திட முடியாது.

10 ஆண்டுகளில் 220 பேரை பலி கொடுத்துள்ளோம்
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் பங்கினையும், மம்தா பானர்ஜி ஆட்சியின் குணாம்சத்தையும் முறையாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு  எதிராகவும், இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஒரு கட்சியாகும். பாசிஸ்ட் வன்முறைகள் மூலமாகவும், கூலிப்படை அரசியல் (lumpen politics) மூலமாகவும் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது முன்னணியையும் குறிவைத்துத் தாக்கி வந்தது. மாநிலத்தில் இடதுசாரி இயக்கத்தை ரவுடித்தனம் மூலமாக நசுக்கிட நடவடிக்கைகளை எடுத்து வந்தது. கடந்த பத்தாண்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 220க்கும் மேற்பட்ட ஊழியர்களும், ஆதரவாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர், லட்சத்திற்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் புனையப்பட்டன, பல பகுதிகளில், அராஜக ஆட்சி தலைவிரித்தாடியது.

பேயுடன் எப்படி கைகோர்க்க முடியும்?
திரிணாமுல் காங்கிரஸ் தன் அரசியல் நடவடிக்கைகளை, பாஜக-வின் கூட்டணிக் கட்சியாக இருந்துதான் துவங்கியது. 2014வரை நரேந்திர மோடி, திரிணாமுல் காங்கிரசை தங்களுடைய ஒரு வலுவான கூட்டணிக் கட்சியாகத்தான் பார்த்தார். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், இடதுசாரிகள் நசுக்கப்பட்டதும் பாஜக தலைதூக்குவதற்கு வசதி செய்து கொடுத்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) நம்புவது போல, ‘பாசிசத்தை’ ஒரு ஜனநாயக விரோத, ரவுடித்தனமான கட்சியால் வெல்ல முடியாது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை, பீகாரில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் போன்றோ, அல்லது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதிக் கட்சி போன்றோ பரிசீலிப்பது, பிழையாகும். பாசிசத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பேயுடன் கைகோர்க்க முடியாது. (In the name of fighting fascism, you cannot sup with the devil.)திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மம்தா அரசாங்கமும், மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்துவந்த சமயத்தில்கூட, தொழிலாளி வர்க்கத்தின் அறைகூவலுக்கிணங்க நாட்டில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தங்களின் போதும், உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினரின் போராட்டங்களின்போதும் அவற்றை எதிர்த்தது மட்டுமல்ல, அவற்றுக்கு எதிராக ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டன. திரிணாமுல் காங்கிரசின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஒரு துயரார்ந்த உதாரணம், மைதுல் என்னும் இளைஞரின் மரணமாகும். இந்த இளைஞர், வாலிபர் - மாணவர் சங்கங்கள் இணைந்து நடத்திய பேரணி ஒன்றின்போது காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் காரணமாக உயிரிழந்தார்.

பாஜக அறுவடை செய்ய அனுமதிக்கலாமா?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கெதிராக மக்கள் மத்தியில் இருந்துவரும் அதிருப்தியின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறது. இது ஒரு மாநில சட்டமன்றத் தேர்தல். திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தைத் தோற்கடித்திட இடதுமுன்னணி உறுதியாகவும், தீவிரமாகவும், ஊசலாட்டமின்றியும் போராடவில்லை என்றால், மக்கள் மத்தியில் நிலவும் மாபெரும் அதிருப்தியுணர்வு பாஜகவினால் அறுவடை செய்துகொள்ளப்பட்டுவிடும். 2019இல் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில்கூட, திரிணாமுல் காங்கிரசின் எதேச்சதிகார ஆட்சியின்கீழ் நொந்து போயிருந்த மக்கள் பாஜக-விற்கு வாக்களித்தார்கள். ஏனெனில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை இடது முன்னணியால் அளிக்க முடியாது என்று அப்போது அவர்கள் கருதினார்கள்.   
மேற்குவங்கத்தில் இன்றைய தினம் உள்ள நிலைமை என்பது, மக்களை பாஜக-வின் இழி சூழ்ச்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழச் செய்திடும் அதேசமயத்தில், நாம் ஏன் திரிணாமுல் காங்கிரசையும் எதிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யின் தேர்தல் உத்தி, மேற்கு வங்கத்தில் பாஜக-விற்கு எதிரான போராட்டத்திற்கு உதவப் போவதில்லை. மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பல்வேறு கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பட்டியலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யின் பொதுச் செயலாளரும் இடம் பெற்றிருக்கிறார்.
மேற்கு வங்கத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),  பாஜகவை முறியடிப்பதற்கான போராட்டத்தில் சிறந்ததொரு அரசியல் மாற்று சக்தியாக இடது முன்னணியைக் காட்டிலும் திரிணாமுல் காங்கிரசை விபரீதமான முறையில் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

(நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 14.03.2021)

தமிழில்: ச.வீரமணி

;