politics

img

வெறுப்பரசியல் அல்ல இது வெறும் விளையாட்டு மட்டுமே!  ரசிகர்கள் நெகிழ்ச்சி - சங்பரிவார் கலவர கும்பல் அதிர்ச்சி 

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 ஆவது  சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். உலகக் கோப்பை டி 20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 முறையும், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 7 முறையும் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றிருக்கிறது. இச்சூழலில் தற்போதைய வெற்றியால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். காரணம் இனி ஒரு வேளை மற்ற அணிகளுடன் மோதி பெறும் வெற்றியைக் கொண்டு மீண்டும் இரு அணிகளும் மோத நேர்ந்தால் போட்டி மேலும் விருவிருப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் இருக்கிறது. 

இதற்கிடையில் ஆட்டம் முடிந்ததும், மைதானத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகம்மது ரிஸ்வானை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கட்டிப்பிடித்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபார் அசாமிற்கும் விராட் கோலி  வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தோனியும் களத்துக்கு வந்து பாகிஸ்தான் வீரர்களுடன் பேசி, அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பாகிஸ்தான் அணியின் வீரர்களும் தோனியுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்தி வரும் சங்பரிவார் கும்பலுக்கு இரு நாட்டு வீரர்களின் நடவடிக்கையும் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

இதேபோல்,ஐனவரி 1999 ஆம் ஆண்டு வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அப்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியுடன் விளையாடியது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது, இந்திய ரசிகர்கள் எப்படியும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் எனப் பாகிஸ்தான் அணியினர் நினைத்தனர். ஆனால் அன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் சிறப்பாக ஆடியது. அப்போது சிறப்பாகப் பந்துகளை வீசி இந்திய விக்கெட்டுகைளை பாகிஸ்தான் வீரர்கள் வீழ்த்தும் போதும் ரசிகர்கள் பந்து வீச்சின் திறமையைப் பாராட்டும் படி  பெரும் ஆரவாரம் எழுப்பினர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. 

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தது. ரசிகர்களின் இந்த செயலால் பாகிஸ்தான் அணி ஆச்சரியமடைந்தது. அன்று முதல் இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியில் தனக்கு பிடித்தமான மொமெண்ட்டாக சென்னை டெஸ்ட்டையும், ரசிகர்களின் ஆரவாரத்தையுமே வாசிம் அக்ரம் நெகிழ்ச்சியுடம் தெரிவிப்பார். 

இந்திய அணி மற்ற அணிகளுடன் விளையாடும் போது அதை வெறும் போட்டியாக மட்டுமே பார்க்கும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போது மட்டும் அதனை மதவெறி வெறுப்பு அரசியலுக்காக சங்பரிவார் எப்போதும் பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

விஷவித்துக்கள் 

நேற்று நடைபெற்ற போட்டியைப் பயன்படுத்தி,  சில  சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள்  பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு தனியார் கல்விக் கூடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றனர்.  உத்தரப்பிரதேசம் மற்றும்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பகுதி  மாணவர்கள் , காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.  இதில் காஷ்மீர் மாணவர்கள் பலத்த காயமடைந்திருக்கின்றனர். தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் தங்கியிருந்த அறையும் சூறையாடப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் சமூக ஊடகங்களில், இந்திய அணியின் தோல்விக்கு, இந்திய அணியின்  பந்து வீச்சாளர் முகமது ஷமிதான் காரணம் என ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் வதந்தியைப் பரப்பி வந்தனர். ஆனால் அவர்களுக்குப் பதிலடியாக இந்திய அணி வீரர்களின் விக்கெட்டை வீழ்த்தியது முகமதுஷமியா அல்லது பாகிஸ்தான் வீரர்களா எனக் கேள்வி எழுப்பினர். பதில் சொல்ல முடியாத நிலையில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது என முன்னாள் கிரிக்கட் வீரரும்  பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் மூலம் ட்விட் செய்ய வைத்தனர். 

இந்த செயலை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திரா சேவாக் வன்மையாகக் கண்டித்துள்ளார்.  இதுகுறித்து குரலெழுப்பிய சேவாக் கூறிப்பிட்டிருப்பதாவது: முகமது ஷமி மீது இணையத்தில் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் நாம் அவருடன் துணை நிற்க வேண்டும். ஏனெனில் இது ஒரு போட்டியில் ஏற்பட்ட தோல்விதான். ஆனால் அவர் ஒரு சாம்பியன் வீரர், மேலும் அவரை நீங்கள் ட்ரால் செய்வதை விட அவருக்கு சப்போர்ட்டாக இருந்தால் நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நீங்கள் இங்கு அவரை விமர்சித்து வருகிறீர்கள். ஆனால் அவர் இந்திய அணிக்காக இந்தியச் சீருடை அணிந்து விளையாடுகிறார் என்று கூறியுள்ளார். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அதைச் சுற்றிப் பரப்பப்படும் ஒரு போலி தேசியவாதத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் இரு நாட்டு ரசிகர்களும் இரையாவது தவிர்க்கப்பட வேண்டும். அதற்கு கிரிக்கெட் கிரிக்கெட்டாக மட்டுமே அணுகப்பட வேண்டும்.  

- சுருதி

;