politics

img

ரயிலைப் பிடித்து திரிபுராவுக்கு வாருங்கள்....

கொல்கத்தா:
சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்க மாநிலத்தில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து தங்களது பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியுள்ளது.  பிப்ரவரி 2ம் தேதியன்று பர்துவானில் டவுன் ஹால் மைதானத்தில் இடதுமுன்னணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் திரிபுராவின் முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் மக்களிடையே எழுச்சிமிகு உரையாற்றினார். 

திரிபுராவில் கடந்த 34 மாதங்களாக நடைபெற்று வரும் பாஜகவின் ஆட்சியின் கீழ் உழைப்பாளி மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் பற்றி கூறும்போது, “இதற்கு முன்னர் 100சதவீதம் அளவில் வேலை கொடுக்கப்பட்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது பாஜக தலைமையிலான அரசால் வெறும் 40 முதல் 45 நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது. முந்தைய இடதுசாரி அரசின் முன்முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வந்த திரிபுரா நகர்புறவேலைவாய்ப்பு திட்டத்தின் தற்போ தைய நிலையும் இதுவேயாகும்” என்றார்.

“மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற தற்போது பாஜக முயற்சி செய்து வருகிறது.  உங்களது மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், இடதுசாரி மற்றும் திரிணாமுல் அரசுகளின் அனுபவங்களைப் பற்றி அவர்கள் உங்களிடம் கூறுவார்கள்.  பாஜகவிற்கு ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் என்று சொல்வார்கள்.  பல்வேறு வாக்குறுதிகளை உங்களுக்கு அளித்துஉங்களை திருப்தி அடையச் செய்து, எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள் என்று கேட்டுக்கொள்வார்கள்.  மேற்கு வங்கத்தை இதுவரைபாஜக ஆட்சி செய்ததில்லை என்பதாலேயே அவர்களுக்கு வாக்களிக்க லாம் என எண்ணிவிடாதீர்கள்.  ஒட்டுமொத்த இந்தியாவின் அனுபவத்தி லிருந்தும், திரிபுரா மாநில மக்களின் அனுபவத்திலிருந்தும் நீங்கள் புரிந்து கொள்ள இயலும். 
விவசாயிகள், சிறுபான்மையினர் மற்றும் இதர பகுதி மக்களுக்கு எதிராகபாஜக தலைமையிலான அரசு எப்படி நடந்து கொள்கிறது என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள்.  பாஜகவை இங்கு வரவழைத்து உங்களது மாநிலத்திற்கு அழிவை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். திரிபுரா மக்கள் அனுபவிக்கும் வேதனையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமெனில், ரயிலைப் பிடித்து திரிபுராவுக்கு வாருங்கள்.  அங்கு வந்துஎங்களது கட்சித் தலைவர்களிடம் பேசவேண்டாம்;  உண்மையைத் தெரிந்துகொள்ள ரிக்சா வண்டியை இழுப்பவர்,மளிகைக்கடைக்காரர் ஆகியோரிடம் பேசுங்கள்.  பாஜகவிற்கு வாக்களித்து எத்தகைய தவறு செய்து விட்டோம் என்று அவர்கள் நிச்சயமாக உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள்.  தாங்கள் செய்த தவறை சரி செய்திட அடுத்த தேர்தலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பது பற்றி அவர்கள் சொல்வார்கள்” என்று அவர் விவரித்தார்.

மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் தேர்தலுக்கு முன்பு பாஜக எவ்வாறு நடந்துகொண்டது என்பதனையும் அவர் நினைவுகூர்ந்தார்.  “தேர்தல் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு பாஜக தலைவர்கள் விமானத்தை வாடகைக்கு எடுத்து திரிபுராவிற்கு வரத் துவங்கினார்கள்.  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 200 நாட்களுக்கு வேலை தருவோம் எனஆசை காட்டினார்கள். மத்திய அரசுஊழியர்களுக்கு இருப்பதைப் போன்றதொரு ஊதியக் கமிஷனை திரிபுரா மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தித் தருவோம் என்றார்கள்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 45 முதல் 56 நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது.  இதுவும் கூட இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்த பிறகே கிடைக்கிறது.  மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய கமிஷன் எதுவும் இதுவரை அமைக்கப்படவே இல்லை.  ஒவ்வொரு குடும்பமும் வேலைவாய்ப்பிற்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தற்போது மேற்குவங்கத்திலும் அதையே செய்யத் துவங்கியுள்ளார்கள்.  பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள்மேற்குவங்கத்திற்கு வரத் துவங்கியுள்ளார்கள்…” என மாணிக் சர்க்கார் மேற்கு வங்க மக்களை எச்சரித்தார். 

2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் திரிபுராவில் பதிவான வாக்குகளில் 43 சதவீத வாக்குகளை பெற்று 36 தொகுதிகளில் வெற்றி பெற்று பிப்ளவ் குமார் தேவ்வை முதலமைச்சராகக் கொண்ட பாஜக அரசுபதவி ஏற்றது.  தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடது முன்னணி 42 சதவீதத்திற்கு சற்று கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதும் 18 தொகுதிகளில் மட்டுமே இடது முன்னணியால் வெற்றி பெற முடிந்தது.புதிய அரசின் ஆட்சிக் காலத்தில் எத்தகைய மாற்றங்கள் திரிபுராவில் ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கிய மாணிக் சர்க்கார், “திரிபுராவில் பல மாதங்களாக தங்களது எதிர்ப்புக் குரலை எழுப்பி வந்த ஆசிரியர்கள் முதலமைச்சரை சந்திக்கச் சென்றபோது, முகமூடி அணிந்த குண்டர்களால் தாக்கப்பட்டனர்.  காவல்நிலையத்தை அணுகினாலும் மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.” என்பதைக் குறிப்பிட்டார்.  இன்றைக்கு திரிபுராவில் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு மறுக்கப்படுகின்றன, ஜனநாயக இயக்கங்கள் நசுக்கப்படுகின்றன என்பதை விளக்க்கினார்.
மேற்குவங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மம்தா பானர்ஜி அரசின் ஆட்சிக் காலத்தில், ‘பணம் பறிக்கும்’ கலாச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருவதைக் கண்டுவருகிறீர்கள்.  தற்போது அத்தகைய கலாச்சாரத்திலேயே ஆர்எஸ்எஸ்-பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.முன்னேற்றப் பாதையில் மேற்கு வங்க மாநிலம் மீண்டும் பயணிக்க வேண்டுமெனில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் நிராகரிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க மக்களிடம் மாணிக் சர்க்கார் வலியுறுத்தினார்.

தொகுப்பு : - ராகினி

;