politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, எதற்காக புதிதாக ஒன்றிய அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தை அமைத்திருக்கிறீர்கள்? கூட்டுறவு சங்கங்கள் என்பவை அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையின்படி முற்றிலும் மாநில அலுவல் ஆகும். எனவே நீங்கள் செய்திருப்பது கூட்டாட்சி மீதான மற்றுமொரு பெரும் தாக்குதலே ஆகும். முதலில் பொதுத்துறை வங்கிகளை சூறையாடினீர்கள்; உங்களது கூட்டுக்களவாணிகளுக்கு பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்து மிகப்பெரும் தொகைகளை கடன்களாக வழங்கினீர்கள். இப்போது மேலும் மக்கள் பணத்தை சூறையாடும் நோக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளையும் அதில் மக்கள் சேமித்துள்ள பணத்தையும் குறி வைக்கிறீர்களா?

                             ****************

பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டம்(யுஏபிஏ) என்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டத்தின்கீழ் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் மோடி அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் தங்களது மாற்றுக்கருத்துக்களைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கொடிய முரண்பாடு என்னவென்றால், இந்தசட்டத்தின்படி கைது செய்யப்படும் எவருக்கும் பிணை வழங்கப்படாது என்பது மிக மோசமானது; அதைவிட கொடுமையானது இந்த வழக்கில் மூன்றாண்டுகள் ஆகியும் இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை என்பதுதான். மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிற இத்தகைய பாசிச தாக்குதல்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.

                             ****************

ஜூலை 7 நிலவரத்தின்படி மும்பையில் பெட்ரோல் விலை 105 ரூபாயைத் தாண்டி 106.25 என்ற விலைக்கு விற்கிறது. சென்னையில் 101 ரூபாயைத் தாண்டிவிட்டது. நாடு முழுவதும் டீசல் விலை 100ரூபாயை நெருங்கிவிட்டது. கிரிமினல் தனத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை மோடி அரசு நடத்திக் கொண்டிருக்கின்றது. உடனடியாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரிகளை திரும்பப் பெறுங்கள். மக்களுக்கு பண மானியமும் இலவச உணவு தானியமும் உடனடியாக வழங்குங்கள்.  

                             ****************

பெரும் மரியாதைக்குரிய முதுபெரும் திரைக்கலைஞர் திலீப் குமார் அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், அப்போதைய திரைப்படங்களில் திலீப் குமாரின் கதாபாத்திரங்கள் மூலம் மனசாட்சி தட்டியெழுப்பப்பட்ட இளைஞர்களாக வளர்ந்து வந்தோம். நாடாளுமன்றத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அவரது உயரிய பண்புகளை நான் கற்றுக் கொண்டேன். திலீப் குமார் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மனைவி சாய்ரா ஜி-க்கும்  கோடிக்கணக்கான அவரது ரசிகர்களுக்கும் இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

                             ****************

2015ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ என்பதை ரத்து செய்து, உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துவிட்டது. ஆனால் அதை ஒன்றிய அரசு தொடர்ந்து மீறியிருப்பது தெரிய வந்துள்ளது. அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வதற்காக மேற்கண்ட சட்டப்பிரிவு 66ஏ-யை ஒன்றிய அரசு முற்றிலும் சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறது. ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குகளை புனைந்துள்ளது. இந்த வழக்குகள் பற்றி தற்போது தெரியவந்துள்ள நிலையில் அதிர்ச்சியடைந்துள்ள உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பாஜக ஒன்றிய அரசும் பாஜக தலைமையிலான மாநில அரசுகளும்நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிப்பதில்லை என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். மேற்கட்ட கொடிய சட்டத்தை சட்டப்புத்தகங்களிலிருந்தே அழித்தொழியுங்கள்! 

;