politics

img

தீக்கதிர் அரசியல் களம்...

சின்னஞ்சிறு கடையை...

மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் தொகுதியில் இடது முன்னணி வேட்பாளராக சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். அத்தொகுதியில் பல இடங்களில் கட்சியின் வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டிருக்கும் தோழர்களை குறிவைத்து திரிணாமுல் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சின்னஞ்சிறிய கடை நடத்தி வரும் கோபால் தே என்ற தோழர் கடுமையாக தாக்கப்பட்டு, அவரது கடை தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலைக் கண்டித்த அப்பகுதி மக்கள், ஒன்றுதிரண்டு போராடியுள்ளனர். இத்தாக்குதலை கண்டித்துள்ள சுஜன் சக்கரவர்த்தி, ஜாதவ்பூரில் இடது முன்னணியின் வெற்றி முகத்தை பொறுக்க முடியாத குண்டர்களின் தாக்குதல் என்று சாடியுள்ளார்.

                                  *******************

அவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்!

படித்தவர்கள் திருமாவளவனுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள் என்று தமது உள்ளத்தின் கொடிய வன்மத்தை வெளிப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பே நடந்து கொண்டிருக்கிறது. “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம், நாங்கள் தலித்துகள் அல்ல, நாங்கள் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்ல; தமிழகத்தின் மனசாட்சிகளில் ஒருவராக, தமிழகத்தின் முற்போக்கு அடையாளங்களில் ஒருவராக, சமூக நீதியின் அடையாளங்களில் ஒருவராக அவர் இருக்கிறார் என்பதால், அவருக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம், நாங்கள் படித்துள்ள படிப்புகளை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்” என்று எண்ணற்றோர் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருமாவளவன், “படித்தவர்கள், படிக்காதவர்கள் என மக்களைப் பாகுப்படுத்தி உயர்வு - தாழ்வு காண்பது சனாதன புத்தியின் விளைச்சல் ஆகும். படிக்காதவர்கள் என்ற சொல்லாடல், ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்வி பெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள். அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல” என்று கூறியுள்ளார்.

                                  *******************

ஜக்கி சொத்து அரசுடைமை ஆகுமா?

ஜக்கிக்கு எதிராக ஆன்மீகர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அவர்கள், ‘தெய்வத் தமிழ் பேரவை’ என்ற பெயரில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். போலிச் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையும், இதர வழிபாட்டு அமைப்புகளும் ஆன்மீகத்தில் தமிழர் மரபுக்குரிய சிவ நெறி- திருமால் நெறி ஆகியவற்றிற்கு முரணான வகையில் செயல்பட்டு வருகின்றன என குற்றம் சாட்டியுள்ள அவர்கள், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் செயல்பட்டு வரும் ஜக்கியின் அமைப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கி, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

                                  *******************

எத்தனை திருவிழாக்கள்!

மோடி ஆட்சியில் எல்லாமே மூடுவிழாவும் திருவிழாவும்தான் என்று சாடியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “தொற்றுத் திருவிழா, கைத்தட்டல் திருவிழா, விளக்கேற்றும் திருவிழா, ஆலை மூடல் திருவிழா, வருமான இழப்பு திருவிழா, தேர்தல் திருவிழா, மேற்குவங்கத்தில் துப்பாக்கிச் சூடு திருவிழா, தடுப்பூசி திருவிழா...” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

                                  *******************

கர்ணன்... கிளர்ந்தெழுகிறான்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி, தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள கர்ணன் திரைப்படம் ஏராளமான பார்வையாளர்களின் பாராட்டுக்களை அள்ளிக் குவித்துள்ளது. அப்படி பாராட்டியவர்களில், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ்-ம் ஒருவர். “கர்ணன்... நியாயமற்ற அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுகிறான். பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் சக்தி வாய்ந்த படம். கர்ணன் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள சிறந்த திரைப்படம்” என்று கூறியுள்ளார்.

;