politics

img

நிதிஷ் குமார் விரும்பினால் பிரதமர் ஆகி விடுவார்... 272 எம்.பி.க்கள் ஆதரவை திரட்டுவதில் சிரமம் இருக்காது...

பாட்னா:
“நிதிஷ் குமார் விரும்பும் பட்சத்தில்அவர் பிரதமர் ஆகிவிட முடியும், அதற்கான தகுதிகள் அவரிடம் உள்ளது. போதுமான எம்.பி.க்களின் ஆதரவைப் பெறுவதிலும் அவருக்கு சிரமம்இருக்காது” என்று ஐக்கிய ஜனதாதளம் தலைவர்கள் கூறியுள்ளனர்.தற்போது வரை பாஜக கூட்டணியிலேயே ஐக்கிய ஜனதாதளம் கட்சிஇடம்பெற்றுள்ளது. ஆனால், அக்கட்சித் தலைவர்களின் இந்தப் பேச்சு, பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைச்சரவையில் அங்கம்வகித்த போதிலும், அண்மைக் காலமாக, பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் பாஜக-வுக்கும்ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக மக்களுக்கு நீண்டகாலமாக உள்ள சந்தேகத்தைப் போக்க,பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவது அவசியம் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக, பீகாரின் முக்கிய எதிர்க் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகளையும் உடன் சேர்த்துக் கொண்டு, கடந்த ஆகஸ்ட் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகவே சந்தித்து மனு அளித்தார்.

இந்தப் பின்னணியிலேயே, “பிரதமர் ஆவதற்கு தேவையான அனைத்துதகுதிகளும் நிதிஷ் குமாரிடம் உள் ளது” என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சி,அதன் தேசிய கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.‘‘நிதிஷ் குமார் பிரதமர் பதவிக் கான போட்டியில் பங்கேற்காமல் போகலாம். ஆனால் அவருக்கு பிரதமருக்குத் தேவையான அனைத்து குணங்களும் உள்ளது’’ என்று ஐக்கியஜனதாதளம் தலைவர் முதன்மை பொதுச் செயலாளர் கே.சி. தியாகி கூறியுள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் இந்த தீர்மானத்திற்கு, “பிரதமர் ஆவதற்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும்” என்று பாஜக உடனடியாகஎதிர்வினையாற்றிய நிலையில், அதற்கும் ஐக்கிய ஜனதாதளம் பதிலளித்துள்ளது.‘‘மிக உயர்ந்த பிரதமர் பதவியை குறிவைக்கும் எண்ணம் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கிடையாது. ஆனால்,நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு தேர்வாகும் பொருட்டு, அதற்கு தேவையான 272 எம்பி.க்களின் ஆதரவை திரட்டுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.பிரதமர் மோடி தலைமையை ஏற்றுக்கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். தற்போது வரை, அவர்களிடம் பிரதமர் பதவியை கேட்கவில்லை. ஆனால், யூகத்தின் அடிப்படையில் மக்கள் எதிர்காலம் குறித்து இப்படி கேட்டால், பின்னர் எதையும் சாத்தியமற்றது என்று நிராகரிக்க முடியாது’’ என்று ஐக்கிய ஜனதாதளம் நாடாளுமன்றக் குழுத் தலைவர் உபேந்திர குஷ்வாகா கூறியுள்ளார்.“தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல, இப்போதும் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கையையும் ஐக்கிய ஜனதாதளம் கிளப்பியுள்ளது.

;