politics

img

இளைய சமுதாயத்தை மோடி அரசு அச்சுறுத்த முயல்கிறது... திஷா ரவி கைதுக்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைக்கலைஞர்கள் கண்டனம்.....

புதுதில்லி:
இந்திய விவசாயத் துறையையும், விவசாயத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகுவைக்கும் மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 80 நாட்களைக் கடந்து, தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் அமைதி வழியிலான இந்தப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்திய அரசு இப்பிரச்சனையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹாலிவுட் திரைப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனினும், மத்திய பாஜக அரசானது, விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் பாகிஸ்தான், சீனா நாடுகளும், சர்வதேச சதியும் உள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டக்களத்திற்குள் உள்ளனர் என்று பழிபோட்டு அதனடிப்படையில் விவசாயிகள் பலர் மீது தேசத்துரோக வழக்கும்பதிவுசெய்து வருகிறது. தீப் சிங் சித்து போன்ற தனது ஆதரவு நடிகர்களை விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்புவதுபோல அனுப்பி, அவர்கள் மூலமாகவே கலவரங்களையும் அரங்கேற்றியது.இந்நிலையில்தான், ஜனவரி 26 அன்று நடந்த வன்முறை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும், அந்த சதிக்கு உடந்தையாக இருந்தார் என்றும் கூறி பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது இளம்பெண் சுற்றுச்சூழல் ஆர்வலரை தற்போது கைது செய்துள்ளது.

இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.“உங்கள் உதடுகளுக்குப் பேச உரிமை உள்ளது. உயிருடன் இருக்கும் வரை உண்மை பேசுங்கள். ஆட்சியாளர்கள் மட்டுமே பயந்துள்ளனர். நாடு பயப்படவில்லை. இந்தியா அமைதியாக இருக்காது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திஷா ரவிக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.“சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்லூரி மாணவியுமான திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது, இதுவரை இல்லாத அளவுக்கான ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். நமது விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பது குற்றச்செயல் கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அரசின் தவறான கொள்கைகளை எதிர்ப்போரைக் கைது செய்வது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றாகும். பொய்ச் செய்திகளை பரப்பி வரும் பாஜக ஐடி உறுப்பினர்கள் மீது அக்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.“இந்திய ஜனநாயகம் கடுமையான பாதிப்பில் உள்ளதைப் பார்த்து, தாம் மிகவும் கவலை கொள்கிறேன்” என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஜா தெரிவித்துஉள்ளார்.
“துப்பாக்கியுடன் உள்ளவர்கள், ஆயுதமற்ற ஒரு சிறு பெண்ணைக் கண்டு அஞ்சுகின்றனர். அந்த ஆயுதமற்ற பெண்ணின் மன தைரியத்தின் ஜுவாலைகள் நாடெங்கும் பரவி வருகிறது” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.திஷா ரவியை கைது செய்து காவலில் வைத்திருப்பது “முற்றிலும் கொடூரமானது” என்றும் “தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்” என்றும் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.

“சமூக ஊடக டூல் கிட்டை ஷேர் செய்ததற்காக 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலரை கைது செய்து விட்டோம் என்பது நாம் போலீஸ் ராஜ்யமாக சரிந்து விட்டோம் என்பதற்கான அறிகுறியாக தெரியவில்லையா?” என்று கர்நாடக சங்கீத பாடகர் டி.எம். கிருஷ்ணா கேள்வி எழுப்பியுள்ளார்.“இந்த கைதின் பின்னணியில், நாட்டின் இளைய சமுதாயத்தையே அச்சுறுத்தி விடலாம் என்பதே நோக்கமாக தெரிகிறது” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.“நீங்கள் நண்பர்களுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் எந்த திரைப்படம், எந்த நேரம், எங்கு செல்வது- என்று செய்தி அனுப்புகிறீர்கள் .... இதை ‘டூல்கிட்’ (Toolkit) என்று அழைக்கலாம். இதன் அசிங்கமான பதிப்பைத்தான் (ஆளும் கட்சிகளின்) ஐடி செல்கள் செய்கின்றன” என்று நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“எதிர்ப்பாளர்கள் ஒரு தேவாலயத்தில் கூடியிருந்தால் அவர்கள் கிறிஸ்தவ கூலிப்படையினர். அவர்கள் பிரியாணி சாப்பிட்டால் ஜிஹாதிகள். அவர்கள் தலைப்பாகை அணிந்தால் காலிஸ்தானியர்கள். அவர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டால் அது ஒரு கருவித்தொகுப்பு (Toolkit)... ஆனால் நாம் மட்டும் இந்த பாசிஸ்ட் அரசாங்கத்தைப் பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது” என்றும் காட்டமாக கூறியிருக்கும் நடிகர் சித்தார்த், “சகோதரி திஷா ரவி, நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். மனவுறுதியுடன் இருங்கள். இந்த அநீதியும் கடந்து போகும்” என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

;