politics

img

தனது பிடிக்குள் வைக்கவே டுவிட்டரை மோடி அரசு மிரட்டுகிறது.... ஆட்சிக்கு வர முன்பு இதே சமூக ஊடகங்களைத்தான் பாஜக பயன்படுத்தியது.....

 மும்பை:
சமூக வலைதளங்களைத் தங்களின் பிடிக்குள் வைத்துக் கொள் ளவே, மத்திய பாஜக அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கொண்டுவந்து டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களை மிரட்டுவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள் ளது.

மத்திய பாஜக அரசு கடந்த மே 25 முதல் நாட்டில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்துள் ளது. ‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும்தொடர்பு எண்களை வலைதளத் தில் வெளியிட வேண்டும்; சர்ச்சைக்குரிய பதிவை யார்முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்பன போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளது.
ஆனால், இந்த விதிமுறைகள் பயனர்களின் தனியுரிமையைப் பறிப்பதுடன், கருத்துச் சுதந்திரத்திற் கும் ஆபத்தானது என்று  டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு பதிவை யார்முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை முகநூல், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டாலும், டுவிட்டர் நிறுவனம் ஒத்துப்போகவில்லை.

ஆனால் 15 நாட்கள் மட்டுமே அவகாசம்; அதற்குள் எங்களின் விதிமுறைகளுக்கு இணங்கிப் போக வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,டுவிட்டர் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையிலேயே, மத்திய அரசின் நடவடிக்கைகளை சிவசேனா-வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் கடுமையாக சாடியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘சிறிது காலத்திற்கு முன்புவரை, பாஜக மற்றும் மோடி அரசின் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் தூணாகவும் ஆத்மாவாகவும் இருந்தது டுவிட்டர்தான். ஆனால், அதுவே இப்போதுஅவர்களுக்கு ஒரு சுமையாக மாறியுள்ளது. இதை எப்படி தூக்கியெறியலாம் என அவர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இன்று, டுவிட்டர் போன்ற சமூகஊடகங்களைத் தவிர, நாட்டின் அனைத்து ஊடகங்களும் மோடி அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் தான் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே ஒருவர் குறித்துப் பொய் செய்திகளைப்பரப்பவும் ஒருவரது பிம்பத்தைச்சேதப்படுத்தவுமே சமூக வலைத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மற்ற கட்சிகளைவிட பாஜக-வுக்கு நன்றாகவே தெரியும். கடந்த2014-ஆம் ஆண்டு தேர்தலின்போதே,இதில் அவர்கள் கைதேர்ந்து இருந்தார்கள். அந்த நேரத்தில் மற்ற கட்சிகளைவிட அவர்கள்தான் ஆன் லைனில் தீவிரமாக இருந்தார்கள். களத்தில் வேலை செய்வதைவிட, சைபர் தளத்திலேயே பாஜக-வினர் நேரம் செலவிட்டனர்.

டுவிட்டர் மற்றும் முகநூலில் ராகுல் காந்திக்கு எதிராக எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்; யாருடைய ஒப்புதலுடன் அப்படிப் பயன்படுத்தினார்கள்; டாக்டர் மன்மோகன் சிங் போன்ற மூத்ததலைவர்களை அவர்கள் எப்படி அழைத்தார்கள்; வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு உழைக்கும் உத்தவ் தாக்கரே தொடங்கி மம்தா பானர்ஜி, சரத் பவார், பிரியங்காகாந்தி, முலாயம் சிங் யாதவ் போன்ற அரசியல் தலைவர்களுக்கு எதிராக எப்படிப்பட்ட ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்..? என அனைவருக்கும் தெரியும். 

இந்த சைபர் பிரச்சாரங்களை பாஜக மட்டும் செய்து வந்தபோது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார் கள். ஆனால், இப்போது சைபர் வெளியில் எதிர்க்கட்சிகளும் வளர்ந்து விட்டன. அவர்கள் பதில் தாக்குதல்களை தொடங்கியதும், பாஜக பீதியடைகிறது. மேற்கு வங்கத் தேர்தலில், திரிணாமுல் தலைவர்கள் மொஹூவா மொய்த்ரா மற்றும் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் டுவிட்டரில் பாஜகவை கிழிக்கத் தொடங்கிவிட்டனர். பீகார் தேர்தலில், தேஜஸ்வி யாதவ் டுவிட்டர் மூலம் மோடி மற்றும் நிதீஷ் குமாரை அம்பலப்படுத்தினார்.இப்போதும், கொரோனா பெருந்தொற்றை பாஜக அரசு எப்படிக் கையாண்டது என்பது சமூக வலைத்தளங்கள் மூலமாகவே மக்களுக்குத் தெரியவந்தது. கங்கை ஆற்றில் மிதந்து வந்த உடல்கள், வாரணாசி மற்றும் குஜராத்தில் தொடர்ந்து எரிந்த பிணங்கள். மயானங்கள் வெளியே வரிசையாக இருந்த சடலங்கள் பாஜகவை உலகத்திற்கு அம்பலப்படுத்தியது. இதன் காரணமாகவே தற்போது அவர்கள் டுவிட்டர் உள்ளிட்ட டிஜிட்டல் தலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்கின்றனர்.இவ்வாறு ‘சாம்னா’ தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள் ளது.

;